நீ இல்லாத இந்த உலகத்தில வாழ முடியல...  காதலன் சாலை விபத்தில் உயிரிழப்பு.. துக்கத்தில் 19 வயது இளம்பெண் உயிரிழப்பு!  

 

 

தெலுங்கானா மாநிலம் ஷம்ஷாபாத் பகுதியில் காதலன் சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில், அவரது பிரிவை தாங்க முடியாமல் 19 வயது இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஷம்ஷாபாத் சித்தேஸ்வர் காலனியைச் சேர்ந்தவர் நர்மதா, 19. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சித்தார்த்த பெஜானி கவுட் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு சித்தார்த்த பெஜானி கவுட் சாலை விபத்தில் உயிரிழந்தார். காதலனின் மரணத்துக்குப் பிறகு நர்மதா மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். காதலன் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்று அவர் அடிக்கடி கூறி வந்ததாகவும், இதனால் அவரது பெற்றோர் அவருக்கு ஆறுதல் கூறி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சம்பவத்தன்று நர்மதாவின் பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவர் உயிரிழந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆர்.ஜி.ஐ.ஏ. போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

நர்மதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.பல ஆண்டுகளாக காதலித்து, திருமணம் செய்ய முடிவு செய்திருந்த நிலையில், காதலன் சாலை விபத்தில் உயிரிழந்த சில நாட்களிலேயே இளம்பெண்ணும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.