வீட்டுக்குள் புகுந்து 2½ வயது குழந்தை கடத்தல்... 12 மணி நேரத்தில் மீட்ட போலீசார்

 

 

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே வீட்டுக்குள் புகுந்து 2½ வயது பெண் குழந்தையை கடத்திச் சென்ற பெண்ணை போலீசார் 12 மணி நேரத்தில் கைது செய்து, குழந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர்.ஐதராபாத் அமீன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சரிதா (25). இவரது மகள் அக்ஷிதா (2½). சரிதா, சம்பவத்தன்று பகலில் குழந்தையை வீட்டில் விட்டுவிட்டு, அதே பகுதியில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த பெண் ஒருவர் குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளார்.

வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிய சரிதா, மகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் குழந்தையைக் கண்டுபிடிக்க முடியாததால், அமீன்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். 25 சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் அமீன்பூர், சந்தாநகர், படான்செரு போலீசார் இணைந்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

தனிப்படை போலீசார், குழந்தை காணாமல் போன பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண் குழந்தையைத் தூக்கிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. விசாரணையில் அந்தப் பெண் மேடக் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

இதையடுத்து மேடக் போலீசாரின் உதவியுடன் நாராயண்கேட் பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அங்கு குழந்தையைக் கடத்திச் சென்ற பெண்ணைப் போலீசார் பிடித்தனர். விசாரணையில் அவர் மேடக் பகுதியைச் சேர்ந்த கங்காமணி (44) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து கங்காமணியை கைது செய்த போலீசார், குழந்தையைப் பத்திரமாக மீட்டு அமீன்பூர் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் குழந்தையை அவரது தாயிடம் ஒப்படைத்தனர். கடத்தப்பட்ட 12 மணி நேரத்துக்குள் குழந்தையை மீட்ட போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன