“நான் அதிமுக... ஆனாலும் சீமானுக்கு ஆதரவு... தயவு செய்து அவருக்கு ஓட்டு போடுங்க” - நடிகர் ஆர்.கே.சுரேஷ்!

 

அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே. சுரேஷ், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு ஆதரவாக வீடியோ ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள சூழலில், காரைக்குடி தொகுதி வேட்பாளரான சீமானுக்கு ஆதரவாக அவர், "எனது சித்தாந்தமும், சீமான் அண்ணனின் சித்தாந்தமும் வெவ்வேறானது. அதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அவர் ஒரு நல்ல மனிதர். கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து மக்களுக்காக அவர் போராடிக் கொண்டிருக்கிறார். அவரது உழைப்பிற்கும் நேர்மைக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும்."

"காரைக்குடி மக்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் அவரைத் தோற்க விட்டுவிடாதீர்கள். அவருக்கு உங்களது ஆதரவைத் தாருங்கள்," என உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த 2021 தேர்தலின் போது காரைக்குடி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டவர் ஆர்.கே.சுரேஷ். தற்போது அதிமுக-வைச் சார்ந்தவராக இருந்து கொண்டு, மற்றொரு கட்சியின் தலைவருக்கு ஆதரவு கேட்டிருப்பது அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு விகிதம் அதிகரிக்க இது உதவுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.