"ஜெயம் ரவியுடனான தொடர்பை முறித்துக் கொள்கிறேன்” - கெனிஷா உருக்கமான அறிவிப்பு!

 

கோலிவுட் வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நடிகர் ஜெயம் ரவி மற்றும் பாடகி கெனிஷா பிரான்சிஸ் விவகாரம், தற்போது ஒரு புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. ஜெயம் ரவியுடனான தனது தொடர்பை முழுமையாக நிறுத்திக் கொள்வதாகவும், சென்னையை விட்டே வெளியேறுவதாகவும் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடியாகவும் உருக்கமாகவும் அறிவித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பரவி வரும் தொடர் விமர்சனங்கள் மற்றும் ஆன்லைன் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தொடர் மனஅழுத்தம் காரணமாகச் சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்துள்ள கெனிஷா, "நான் சென்னை நகரத்தை விட்டு வெளியேறுகிறேன். இசை, தெரபி (சிகிச்சை), இதுவரை நான் வாழ்ந்த வாழ்க்கை என அனைத்தையும் விட்டுவிடுகிறேன். நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் எனக்குத் தேவையான தனியுரிமையை வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

"நான் ரவி மோகனைச் சந்தித்தபோது, அவர் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார். ஒரு கடினமான காலகட்டத்தைக் கடந்து கொண்டிருந்த அவருக்கு, ஒரு தெரபிஸ்டாக என்னால் முடிந்த ஆலோசனைகளை வழங்கினேன், அவ்வளவுதான். ரவி மோகன் ஒன்றும் குழந்தை கிடையாது. தன் வாழ்க்கையில் என்ன செய்ய வேண்டும் என்று முடிவெடுக்கும் முதிர்ச்சி அவருக்கு உண்டு. இதில் ஏன் தேவையில்லாமல் என் பெயரை இழுக்கிறீர்கள்?"

தன்னைச் சுற்றி எழுந்த அவதூறுகளுக்குப் பதிலடி கொடுத்துள்ள அவர், தனது தனிப்பட்ட சோகம் குறித்தும் அதில் பகிர்ந்துள்ளார். "வயிற்றிலேயே ஒரு குழந்தையை இழந்த வலி எனக்குத் தெரியும். அப்படியிருக்கையில், இன்னொருவரின் குடும்பத்தை நான் ஏன் கெடுக்க நினைக்கப் போகிறேன்? நானும் ரவி மோகனும் உங்கள் கண்முன்னால்தான் இருக்கிறோம், நாங்கள் எங்கும் ஓடிப்போகவில்லை" என்று ஆதங்கப்பட்டுள்ளார்.

இறுதியாக இந்த விவகாரத்தில் இருந்து தான் முழுமையாக விலகுவதை உறுதி செய்துள்ள கெனிஷா, "ஒருவரைக் காப்பாற்றவும், ஆதரிக்கவும் முயன்றேன். ஆனால் மக்கள் ஏற்கனவே அவரைப் பற்றி ஒரு முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இந்த உலகம் நல்லவர்களை விட பொய்யர்கள், சூழ்ச்சியாளர்கள், ஏமாற்றுபவர்களையே அதிகம் நம்புகிறது. அவரை இப்போது உலகத்திடம் விட்டுவிடுகிறேன். நீங்கள் விரும்பியது நடந்து விட்டது. கடைசியாக பெண்வாதம் ஜெயித்து விட்டது, ஆனால் மகிழ்ச்சி தோற்று விட்டது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், மற்றவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நோண்டுவதை விட்டுவிட்டு, சமூகத்தில் உள்ள உண்மையான பிரச்சினைகள் குறித்துப் பேசுமாறும், மக்கள் தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். கெனிஷாவின் இந்த அதிரடி முடிவு சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.