”நான் முதல்வர் போல ஓடுகாலி கிடையாது; தீவிரவாதி போல் அழைத்துச் சென்றனர்” - உதயநிதி பேட்டி!

 

காவல்துறை விசாரணை முடிந்து காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்ட திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை திரும்புவதற்காகத் திருச்சி விமான நிலையம் வந்தபோது செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமாகப் பேட்டியளித்தார்.

"திமுக தலைவரின் உத்தரவை ஏற்றுத் தஞ்சாவூரில் விவசாயிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்தினோம். விவசாயிகளுக்கு தவெக அரசு செய்த துரோகங்கள் மற்றும் பொய் வாக்குறுதிகள் குறித்துத் தான் நான் பேசினேன்; யாரையும் தவறாகப் பேசவில்லை. காவிரிப் பிரச்சனையைச் சட்டமன்றத்தில் எழுப்பக் கூடாது என்பதற்காகவே தவெக அரசு இந்த விவகாரத்தைத் திசைதிருப்புகிறது" என்றார்.

"நான் பேசாத ஒன்றை 'கட் காபி' செய்து பரப்பியுள்ளனர். பெண்களைத் தரம் தாழ்த்திப் பேச வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை. எனக்கு மனைவி, மகள் இருக்கிறார்கள்; தமிழகப் பெண்களைத் தாயாகவும் சகோதரிகளாகவும் தான் பார்க்கிறேன். நான் இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை, சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பேசுவேன்" என விளக்கம் அளித்தார்.

"என்னை ஏதோ ஒரு தீவிரவாதியைப் போலக் கைது செய்து 400 கி.மீ தூரம் வாகனத்திலேயே அழைத்துச் சென்று செங்கிப்பட்டியில் வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். பொய் வழக்கு போட்டுப் பயமுறுத்தப் பார்க்கிறார்கள்; விவசாயிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக இந்தத் தரம்கெட்ட அரசு செய்த கைதுக்கு நான் ஒருபோதும் அஞ்சமாட்டேன்" எனக் குறிப்பிட்டார்.

"முதலமைச்சர் விஜய் கர்நாடகாவை எதிர்த்துப் பேசத் தைரியம் இல்லாதவராக இருக்கிறார். இதே திருச்சி விமான நிலையத்தில் ஒரு சம்பவத்தின் போது செய்தியாளர்களைச் சந்திக்காமல் ஓடியவர் அவர். நான் அவரைப் போல ஓடுகாலி அல்ல; பொய் வழக்குகளைச் சட்டப்பூர்வமாக எதிர்கொள்வேன்" என ஆவேசமாகத் தெரிவித்தார்.