"திமுகவின் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சப்போவதில்லை... லஞ்சம் கேட்டது உண்மைதான்..” - ஸ்ரீதர் வேம்பு குற்றச்சாட்டு!

 

"திமுக ஆட்சியின் போது பள்ளி அங்கீகாரத்திற்காக லஞ்சம் கேட்டுத் துன்புறுத்தப்பட்டோம்; ஆனால் தற்போதைய தவெக ஆட்சியில் ஒரு பைசா கூட இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று பிரபல ஜோஹோ நிறுவனத்தின் தலைவரும், முன்னணி தொழிலதிபருமான ஸ்ரீதர் வேம்பு திமுக மீது கடுமையான புகார்களை முன்வைத்துள்ளார்.

இது குறித்து ஸ்ரீதர் வேம்பு தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த காலங்களில் தங்களுக்கு நேர்ந்த நிர்வாக ரீதியிலான நெருக்கடிகளைப் பட்டியலிட்டுள்ளார்.

"மாநில அரசின் முறையான அங்கீகாரம் இல்லாமல் தேனியில் பள்ளி நடத்தியதாகக் கூறி, கடந்த திமுக ஆட்சியின் போது நாங்கள் கடுமையான துன்புறுத்தலுக்கு ஆளானோம். அங்கீகாரம் வழங்க லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் நிர்பந்தம் செய்யப்பட்டதால், நாங்கள் கடைசி வரை லஞ்சம் கொடுக்காமல் அங்கீகாரம் பெறாமலேயே இருந்தோம்."

"இதேபோலத் தென்காசியில் உள்ள தேசிய திறந்தநிலை பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை வழங்கவும் அப்போதைய திமுக அரசு லஞ்சத்தை எதிர்பார்த்துக் காக்க வைத்தது" என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுத் தவெக அரசு அமைந்த பிறகு, நிர்வாகத்தில் லஞ்சம் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாக அவர் பாராட்டியுள்ளார். "தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் எங்களது பள்ளி கட்டிடங்களுக்குத் தற்பொழுது அனுமதி கொடுத்துள்ளனர். எந்தவொரு ஒப்புதலுக்காகவும் யாருக்கும் ஒரு ரூபாய் கூட பணம் கொடுக்க வேண்டாம் என்று தற்போதைய தவெக அரசின் அதிகாரிகள் எங்களிடம் கனிவோடு கூறினார்கள். இதற்கு முன்பு நாங்கள் அனுபவித்த துன்பங்களுக்குப் பிறகு, இந்த நேர்மையான மாற்றத்தைப் பொதுவெளியில் நான் பாராட்டியே ஆக வேண்டும்."

தமது விமர்சனங்களுக்கு எதிராக வரும் அரசியல் ரீதியிலான தனிநபர் தாக்குதல்களுக்குத் தான் அஞ்சப் போவதில்லை என்றும் ஸ்ரீதர் வேம்பு அதில் பதிவிட்டுள்ளார்: "இதைச் சொல்வதால் என்னை ஒரு த.வெ.க.வின் கைக்கூலி என்றோ, சங்கி என்றோ அல்லது வேறு எதுவாகவும் தி.மு.க.வினர் முத்திரை குத்த நினைத்தால் எனக்குக் கவலையில்லை. அவர்களின் இழிவான தனிப்பட்ட தாக்குதல்களுக்கு நான் எப்போதும் பணிய மாட்டேன்."

"தி.மு.க.வினரைப் போன்று நான் பரம்பரைப் பணக்காரர் இல்லை. நான் ஏழ்மையான பின்னணியில் இருந்து ஏதுமில்லாமல் சொந்த உழைப்பால் வளர்ந்தவன். தமிழ் வழிப் பள்ளிகளில் படித்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். நான் மரணத்திற்கே அஞ்சாதவன், தி.மு.க.வின் மிரட்டல்களுக்கு ஏன் அஞ்ச வேண்டும்? தி.மு.க.வினருக்குச் சிறிதளவாவது மனசாட்சி இருந்தால், அவர்கள் கொள்ளையடித்த பணத்தைத் மக்களிடமே திருப்பிக் கொடுக்கலாம்" என்று மிக ஆவேசமாகத் தனது எக்ஸ் பதிவில் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

தொழிலதிபர் ஸ்ரீதர் வேம்பின் இந்த வெளிப்படையான அரசியல் குற்றச்சாட்டு மற்றும் தவெக அரசுக்கான பாராட்டு, தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளத் தளங்களில்  விவாதப் பொருளாக மாறியுள்ளது.