"வீடியோவில் இருப்பது நானில்லை" - வைரல் வீடியோ வதந்திக்கு அமைச்சர் கீர்த்தனா விளக்கம்!
தன்னைப் பற்றிச் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வைரல் வீடியோ குறித்துத் தமிழக அமைச்சர் கீர்த்தனா எக்ஸ் தளத்தில் காரசாரமான விளக்கமளித்துள்ளார்.
"சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அந்த காணொளியில் இருக்கும் பெண் நான் அல்ல. ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதனால் என்ன ஆகப்போகிறது?" என நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
"ஒரு பெண்ணின் உடை, தோற்றம் அல்லது அவரது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொது தளத்தில் விசாரணைக்குரிய விஷயங்களாகப் பார்க்கப்படுகின்றன?" என்று தனது அதிருப்தியைப் பதிவிட்டுள்ளார். "எங்களது கொள்கைகள், ஆட்சிமுறை அல்லது செயல்பாடுகள் குறித்துக் கேள்வி கேட்க முடியாதவர்கள், தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிப் புனைக்கதைகளை உருவாக்குகிறார்கள்" எனக் கடுமையாகச் சாடினார்.
ஆக்கப்பூர்வமாகப் பங்களிக்கச் சான்றுகள் எதுவும் இல்லாதவர்களின் மிகப் பழமையான ஆயுதமே 'பெண் வெறுப்பு'தான் என அவர் தனது பதிவில் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஆதரவையும் பெற்று வருகிறது.