“நான்தான் சிவன், நீ பார்வதி..” - ஆபாச வீடியோ காட்டி இளம்பெண்ணை 3 ஆண்டுகளாக பலாத்காரம் செய்துவந்த 'கேப்டன்' காட் சாமியார்!
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தைச் சேர்ந்த அசோக் காரத் என்ற போலிச் சாமியார், தன்னை ஒரு ஆன்மிகவாதி என்றும் 'கேப்டன் காரத்' என்றும் அடையாளப்படுத்திக் கொண்டு பல பெண்களைச் சீரழித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புனேவைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்கப் பெண்ணிற்கு, சமூக வலைதளம் மூலமாக அசோக் காரத் அறிமுகமாகியுள்ளார். தான் ஒரு முன்னாள் வணிகக் கப்பல் போக்குவரத்துத் துறை அதிகாரி என்று கூறி அந்தப் பெண்ணிடம் பழகியுள்ளார். தன்னைச் சிவபெருமானின் அவதாரம் என்றும், அந்தப் பெண் பார்வதி தேவி என்றும் கூறி ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு புனேவில் உள்ள ஒரு விடுதியில் அந்தப் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அதனை ரகசியமாக வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை வைத்தே கடந்த 3 ஆண்டுகளாகப் பெண்ணைத் தொடர்ந்து மிரட்டி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். தொடர்ந்து அந்தச் சாமியாரின் சித்திரவதைகளைத் தாங்க முடியாத அந்தப் பெண், இறுதியாகத் துணிச்சலுடன் போலீசில் புகார் அளித்தார்.
முதலில் மணிக்பூர் போலீசார் 'ஜீரோ எஃப்.ஐ.ஆர்' பதிவு செய்து, பின்னர் வழக்கை புனே ஹடப்சர் காவல் நிலையத்திற்கு மாற்றினர். சாமியாரின் ஆசிரமத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள், ஒரு டைரி மற்றும் பல ரகசிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தலைமறைவாக உள்ள அசோக் காரத்தை பிடிப்பதற்காக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி பரவியதைத் தொடர்ந்து, அந்தப் போலிச் சாமியாரால் பாதிக்கப்பட்ட இன்னும் பல பெண்களும் தற்போது தைரியமாக முன்வந்து புகார் அளிக்கத் தொடங்கியுள்ளனர். ஆன்மீகம் என்ற பெயரில் பெண்களை ஏமாற்றி வந்த இந்த 'கேப்டன்' சாமியாரின் உண்மை முகம் வெளிவந்தது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.