"நான் உங்கள் வீட்டுப் பிள்ளை!" - திருவாரூரில் மு.க. ஸ்டாலின் உருக்கமாக பேச்சு!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது முதல் பிரசாரக் கூட்டத்தைத் திருவாரூர் தெற்கு வீதியில் தியாகராஜசுவாமி கோவில் அருகே நேற்று மாலை துவங்கினார்.
பெரும்திரளாகத் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய மு.க. ஸ்டாலின், திருவாரூர் மண்ணுடனான தனது பிணைப்பைத் தொண்டர்களிடம் பகிர்ந்துகொண்டார். "நான் கலைஞரின் மகன், உங்கள் வீட்டுப் பிள்ளை, இந்த மண்ணின் மைந்தன் என்ற உரிமையோடு இங்கே வந்திருக்கிறேன். திருவாரூர் என்பது வெறும் ஊர் அல்ல, அது திமுகவின் ஊர். கலைஞரை வளர்த்தெடுத்த இந்த மண்ணில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குவதே வெற்றிக்கு முதல்படி" என்றார்.
"திருவாரூர் என்றாலே ஆழித்தேரோட்டம் தான் நினைவுக்கு வரும். சமீபத்தில் அந்தத் தேரோட்டம் கம்பீரமாக நடந்து முடிந்துள்ளது. சிதிலமடைந்து நின்ற ஆழித்தேரை மீண்டும் ஓட வைத்த பெருமை கலைஞர் கருணாநிதியையே சாரும்" என அவர் நினைவு கூர்ந்தார்.
"தேர்தல் வெற்றி உறுதியாகிவிட்டது. அதை உறுதிப்படுத்தவே நான் இங்கு வந்துள்ளேன். திமுகவின் தேர்தல் அறிக்கையான 'சூப்பர் ஸ்டார் அறிக்கை'யை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள்" என நம்பிக்கைத் தெரிவித்தார்.
திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் பூண்டி கலைவாணன், மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி. ராஜா, திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் மாரிமுத்து மற்றும் நன்னிலம் முகமது முபாரக் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்குச் சேகரித்தார்.
திருவாரூரில் பிரசாரத்தைத் தொடங்கியுள்ள முதலமைச்சர், இன்று (ஏப்ரல் 1) திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறார். நாளை (ஏப்ரல் 2) ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் தனது பிரசாரத்தைத் தொடர உள்ளார்.