"நான் தான் உங்கள் எம்எல்ஏ": பிரேமலதா விஜயகாந்தின் பேச்சால் கிராமத்தில் சிரிப்பலை!
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், கரும்பு வெட்டும் தொழிலாளர்களிடம் கலகலப்பாக உரையாடியது அப்பகுதியில் கலகலப்பான சூழலை உருவாக்கியது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் பிரேமலதா விஜயகாந்த் திடீர் பயணம் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்தார். அப்போது கர்நத்தம் பகுதிக்கு அருகில் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களிடம் அவர் நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தார்.
தொழிலாளர்களிடம் உரையாடிய அவர், "என்னை யாரென்று தெரிகிறதா?" என்று நமுட்டுச் சிரிப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அங்குள்ள பெண்கள் ஆரம்பத்தில் சற்று யோசித்துவிட்டுத் தெரியவில்லை என்று பதிலளித்துள்ளனர்.
உடனே பிரேமலதா விஜயகாந்த், "நான் ஏதாவது சினிமாவில் நடித்திருந்தால் என்னை அனைவருக்குமே தெரிந்திருக்கும்; நான்தான் உங்கள் எம்எல்ஏ" என்று கலகலப்பாகக் கூறினார். இதனைக் கேட்டதும் அங்கே கூடியிருந்த தொழிலாளர்களும் பொதுமக்களும் கலகலவெனச் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.