"ராஷ்மிகா மாதிரி என்னால இருக்க முடியாது” - ஐஸ்வர்யா லஷ்மி ஓபன் டாக்!
'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் பூங்குழலி கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் நெஞ்சங்களைக் கொள்ளையடித்த பிரபல தென்னிந்திய நடிகை ஐஸ்வர்யா லஷ்மி, கமர்ஷியல் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா போலத் தன்னால் முழுமையான வணிகக் கதாநாயகியாகப் பரிணமிக்க முடியாது என்று ஓப்பனாகத் தெரிவித்துள்ளார்.
தனது தனித்துவமான கதைத் தேர்வுகளின் மூலம் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ள ஐஸ்வர்யா லக்ஷ்மி, அண்மைய நேர்காணல் ஒன்றில் சக நடிகையான ராஷ்மிகா மந்தனா குறித்துப் பெருமிதத்துடன் பேசியுள்ளார்.
"திரையுலகில் நடிகை ராஷ்மிகா மந்தனா போன்று ஒரு முழுமையான வணிகக் கதாநாயகியாக வலம் வருவது சாதாரண விஷயமல்ல; அவர் அதை மிகுந்த நேர்த்தியுடனும், அர்ப்பணிப்புடனும் செய்கிறார். ஆனால், என்னைப் பொறுத்தவரை ராஷ்மிகா மாதிரி என்னால் இருக்க முடியாது."
வணிகப் படங்களில் கவர்ச்சியாகவும், துள்ளலாகவும் நடனமாடி நடிப்பதைக் காட்டிலும், தனக்கு நடிப்புத் திறமையை வெளிப்படுத்தக் கூடிய அழுத்தமான கதாபாத்திரங்களே மனநிறைவைத் தருவதாக குறிப்பிட்ட அவர், "எனக்குக் கொடுக்கப்படும் கதாபாத்திரங்களை எவ்வளவு சிறப்பாக, ஆழமாகச் செய்ய முடியுமோ அதில் மட்டும்தான் எனக்குப் பேரானந்தம் கிடைக்கிறது. ராஷ்மிகா செய்யும் பாணி எனக்கு எளிதில் வராது என்பதால், எனக்குப் பொருத்தமான, கதையின் ஓட்டத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை மட்டுமே நான் தேடித்தேடித் தேர்வு செய்து நடித்து வருகிறேன்," எனத் தனது சினிமாப் பயணம் குறித்த தெளிவான பார்வையைப் பகிர்ந்துள்ளார்.