"முடிஞ்சா.. தைரியமிருந்தா முதலமைச்சர் பதில் சொல்லட்டும்" - உதயநிதி குற்றச்சாட்டு!
தமிழகச் சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், தவெக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கறுப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்தனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களையே பெயர்களை மாற்றிப் புதிய திட்டங்கள் போல தவெக அரசு அறிவித்து மக்களை ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றம், குறுவை சாகுபடி செய்ய முடியாத சூழல் எனப் பல்வேறு நிலைகளில் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். காவிரி மற்றும் மேகதாது விவகாரங்கள் குறித்துச் சட்டமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வரச் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளதாகத் தெரிவித்தார்.
"நாளை விவாதத்தின் போது பல கேள்விகளைக் கேட்போம். முடிஞ்சா, தைரியம் இருந்தா முதலமைச்சர் வாயைத் திறந்து பதில் சொல்லட்டும். மேலும், காவிரிப் பிரச்சினை தொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்" என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.