“டம்மி முதல்வர் என விமர்சித்தேன் அதுக்கு நடவடிக்கை இல்லை.. தண்ணீர் வரலைன்னு சொன்னதால் கைது” - உதயநிதி மீண்டும் கிண்டல்!
திமுகவின் மிக முக்கியப் பாதுகாப்பு அரணாகத் திகழ்வது கட்சியின் சட்டத்துறைதான் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை வடக்கு மண்டல வழக்கறிஞர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார்.
"தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசியதற்காக என்னைக் கைது செய்யப் போலீசார் வந்தபோது நான் நாளிதழ் படித்துக் கொண்டிருந்தேன். தவெக அரசை விமர்சித்ததற்காகத்தான் கைது செய்கிறார்கள் என நினைத்தேன்" என்று கூறினார்.
"ஆர்ப்பாட்டத்தில் 'டம்மி முதலமைச்சர்' எனக் கூறியதற்கு ஒப்புக் கொண்டார்கள். 'கேடுகெட்ட, வெட்கங்கெட்ட அரசு' எனக் கூறியதற்கு எந்த எதிர்வினையும் இல்லை. ஆனால், காவிரியில் தண்ணீர் வரவில்லை எனக் கூறியதைக் தாங்கிக்கொள்ள முடியாமல் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்" எனக் கிண்டலடித்தார்.
திமுக மீது கைது நடவடிக்கைகளை எடுக்க தவெக அரசு டைம் டேபிள் போட்டுச் செயல்பட்டு வருகிறது. மிசா மற்றும் எமர்ஜென்சியையே எதிர்கொண்ட திமுகவுக்கு இந்த கைது நடவடிக்கை ஒரு மிகப்பெரிய நகைச்சுவை போன்றது.
தவெக ஆட்சியில் எந்தத் துறைக்கு யார் அமைச்சர் என்பதே யாருக்கும் தெரியவில்லை. இந்த அரசுக்குக் கழகத்தைப் பற்றியோ, அதன் சட்டத்துறையின் வரலாறு பற்றியோ எதுவும் தெரியவில்லை.
கோவையில் படுகொலை செய்யப்பட்ட அமுதன் விவகாரம் குறித்துச் சட்டமன்றத்தில் பேசத் தொடங்கியபோது, அதை 'கோஷ்டி பூசல்' எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கூறினார். 10 பேருக்கும் 10 பேருக்கும் இடையே நடந்தால் அது கோஷ்டி பூசல்; ஆனால் 10 பேர் சேர்ந்து ஒருவரைக் கொன்றால் அது 'கொலை'.
திமுகவின் வரலாற்றில் பேரறிஞர் அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களுக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் அதை உடைத்தெறிந்தது சட்டத்துறை தான். தவெக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக வழக்கறிஞர்கள் தான் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார்கள்.