"நான் தவெக-வில் இணையவில்லை...” வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த திமுக MLA!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ ஒருவரே கட்சி மாறப்போவதாகப் பரவிய தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சம்பந்தப்பட்ட திமுக எம்.எல்.ஏ அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.

திமுகவின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ-வுமான கருணாநிதி, நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்தில்' (தவெக) இணையப் போவதாகவும், அவர் விஜய்யைச் சந்தித்துப் பேசியதாகவும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவியது. இதனால் திமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் குழப்பம் நிலவியது.

இது குறித்து உடனடியாக விளக்கமளித்த எம்.எல்.ஏ கருணாநிதி, தான் திமுக-விலேயே நீடிப்பதாகவும், தவெக-வில் இணைவதாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் பொய் என்றும் கூறினார். மேலும் "தற்போதுள்ள நவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, யாரோ மர்ம நபர்கள் எனது உருவத்தையும், குரலையும் வைத்து ஒரு போலி வீடியோவை உருவாக்கியுள்ளனர்.

எனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கவும், தேர்தல் நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தவும் இத்தகைய கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டுள்ளனர்" என ஆவேசமாகத் தெரிவித்தார். இது தொடர்பாகச் சென்னை தி.நகர் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் முறைப்படி புகார் அளித்துள்ளார். இந்தப் போலி வீடியோவை உருவாக்கியவர்கள் மீது சைபர் கிரைம் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் நேரத்தில் அரசியல் தலைவர்களின் உருவத்தைப் பயன்படுத்திப் பரப்பப்படும் இத்தகைய 'டீப் ஃபேக்'  வீடியோக்கள் தற்போது தேர்தல் ஆணையத்திற்கும், போலீசாருக்கும் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.