"கூட்டணி, தேர்தல், வெற்றி, தோல்வி பற்றி கவலையில்லை" - திருமாவளவன் அதிரடி!
திமுக கூட்டணியில் இருந்து கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய்க்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக எழுந்துள்ள விமர்சனங்களுக்கு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் இன்று தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தவெக தலைவர் விஜய் குறித்தான தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக உடைத்துப் பேசினார். "நான் மிகவும் பக்குவமாக, சமநிலையான அரசியலைத் தான் தற்பொழுது மேற்கொண்டு வருகிறேன். தற்போதைய சூழலில் எனக்குக் கூட்டணி, தேர்தல், வெற்றி அல்லது தோல்வி ஆகியவற்றைப் பற்றிக் கவலையே இல்லை. சமூக நீதியையும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளையும் நிலைநாட்டுவதே எங்களது பிரதான நோக்கம்."
"ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை தான் தவெக என்று கடந்த காலங்களில் கடுமையாக விமர்சனம் செய்த திருமாவளவன், ஏன் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவு கொடுக்கிறார்? என்று பலரும் என்னைக் நோக்கி விசித்திரமாகக் கேள்வி எழுப்புகிறார்கள்." தன்னை நோக்கி மட்டுமே கேள்வி எழுப்பும் விமர்சகர்களுக்குத் திருமாவளவன் தனது பாணியில் ஒரு சவாலான கேள்வியை முன்வைத்துள்ளார்:
"என்னை நோக்கிக் கேள்வி எழுப்பும் உங்களால், நேரடியாக முதலமைச்சர் விஜயிடம் சென்று, 'உங்களை ஆர்.எஸ்.எஸ்-ன் பிள்ளை என்று திருமாவளவன் கடுமையாக விமர்சனம் செய்தாரே, அப்படியிருந்தும் எதற்காக அவரிடம் சென்று நீங்கள் ஆதரவு கேட்டீர்கள்?' என்று தைரியமாகக் கேட்க முடியுமா?"
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்த பிறகு, திமுக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் தவெக இடையேயான அரசியல் நகர்வுகள் தொடர்ந்து விவாதப் பொருளாக மாறி வரும் வேளையில், திருமாவளவனின் இந்த 'பேலன்சிங்' அரசியல் பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.