"கமிஷனும் வேணாம்; கட்சி நிதியும் வேணாம்... ஆனா தரம் முக்கியம்” - ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!

 

"ஒப்பந்ததாரர்கள் இனி யாருக்கும் லஞ்சமோ, கட்சி நிதியோ கொடுக்கத் தேவையில்லை; ஆனால், அரசுப் பணிகளின் தரத்தில் ஒரு சதவீதக் குறைபாடு கூட இருக்கக் கூடாது" என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில், அரசு ஒப்பந்ததாரர்களுடன் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அவசர ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தின் போது ஒப்பந்ததாரர்கள் தங்களது குமுறல்களை அமைச்சரிடம் நேரிடையாகப் போட்டுடைத்தனர். "முந்தைய ஆட்சிக் காலத்தில் டெண்டர் தொகையில் சுமார் 20 சதவீதம் வரை ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் லஞ்சமாகக் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருந்தது" என்று அவர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினர்.

ஒப்பந்ததாரர்களின் புகார்களைக் கேட்டறிந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, புதிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். கூட்டத்தில் அமைச்சர் பேசுகையில், "இனிவரும் காலங்களில் பொதுப்பணித்துறை டெண்டர்களில் 100% வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படும். ஒப்பந்ததாரர்கள் யாரும் லஞ்சமோ அல்லது கட்சி நிதியோ ஒரு பைசா கூட வழங்கத் தேவையில்லை. உங்களை யாராவது லஞ்சம் கேட்டு மிரட்டினாலோ அல்லது அச்சுறுத்தினாலோ, உடனடியாகப் புகார் அளிக்க ஏதுவாக விரைவில் 'டோல் ஃப்ரீ'  புகார் எண் ஒன்று அறிவிக்கப்படும்."

லஞ்சம் வாங்க மாட்டோம் என்று கூறிய அமைச்சர், பணிகளின் தரம் குறித்து ஒப்பந்ததாரர்களுக்குப் பலத்த எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.

"ஆட்சியாளர்களுக்கு லஞ்சம் கொடுக்கத் தேவையில்லை என்பதால், அந்த பணத்தைச் சேமித்து ஒப்பந்தப் பணிகளை மிகவும் தரமாகவும், குறித்த காலக்கெடுவுக்குள்ளும் முடித்துக் கொடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ய சிங்கப்பூர் மற்றும் டெல்லியில் இருந்து சர்வதேச நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு நேரடி சோதனைகள் நடத்தப்படும்.

பணிகளின் தரத்தில் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டால், முதற்கட்டமாக ஒரே ஒருமுறை மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்படும். மீண்டும் அதே தவறு தொடர்ந்தால், எவ்வித பாரபட்சமுமின்றி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் டெண்டர் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, அவர் கறுப்புப் பட்டியலில் வைக்கப்படுவார்" என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கறாராகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த பேச்சு, ஒப்பந்ததாரர்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியிருந்தாலும், தரக் கட்டுப்பாட்டு எச்சரிக்கை அதிகார வர்க்கத்தினரையும் ஒப்பந்ததாரர்களையும் அலற வைத்துள்ளது.