"எனக்கு அலர்ஜி, நரம்பு, இதயப் பிரச்சினை உள்ளது; ஜூலை 15-ல் கட்டாயம் ஆஜராவேன்" - எ.வ.வேலு விளக்கம்!
சாலை மோசடி வழக்கு விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, வரும் ஜூலை 15-ஆம் தேதி தான் விசாரணைக் குழுவின் முன்னிலையில் கட்டாயம் ஆஜராகப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எ.வ.வேலு, தனது வெளிநாட்டுப் பயணம் குறித்தும், தனக்குள்ள உடல்நலப் பாதிப்புகள் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார். தனக்கு அலர்ஜி, நியூரோ (நரம்பு சார்ந்த பிரச்சினைகள்) மற்றும் இதயப் பிரச்சினைகள் நீண்ட நாட்களாக இருந்து வருகின்றன.
இதற்காகக் கடந்த 2016-ஆம் ஆண்டு முதலே சிங்கப்பூரில் உள்ள பிரபல 'மவுண்ட் எலிசபெத்' மருத்துவமனைக்குச் சென்று நான் சிகிச்சை பெற்று வருகிறேன். அதற்கான அனைத்து மருத்துவ ஆதாரங்களும், ஆவணங்களும் என்னிடம் முறையாக உள்ளன. லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்தச் சோதனை நடவடிக்கை மற்றும் சம்மன் விவகாரங்களுக்கு முன்னரே, அதாவது கடந்த ஜூன் 17-ஆம் தேதியே சிங்கப்பூர் செல்வதற்கான பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. எனவே, இது திட்டமிட்ட மருத்துவப் பயணமே தவிர, விசாரணைக்கு அஞ்சி ஓடியது அல்ல.
விசாரணைத் தேதிகள் குறித்து அவர் அளித்த விளக்கத்தில், கடந்த ஜூலை 3-ஆம் தேதி தன்னை ஆஜராகக் கோரி லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியிருந்ததாகக் குறிப்பிட்டார். ஆனால், தான் சிங்கப்பூரில் சிகிச்சையில் இருந்ததாலும், சென்னை திரும்ப எப்படியும் 10 நாட்கள் ஆகும் என்பதாலும் தகுந்த விளக்கம் அளித்து அதிகாரிகளுக்குக் கடிதம் அனுப்பியதாகத் தெரிவித்தார்.
அந்தக் கடிதத்தில், "ஜூலை 12-ஆம் தேதிக்கு மேல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் எந்தத் தேதியைக் குறிப்பிட்டாலும், அந்த நாளில் நேரில் ஆஜராகத் தயாராக இருக்கிறேன்" என்று தான் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
"விசாரணைக்கு அஞ்சி ஓடுவது, ஒளிவது, பதுங்குவது போன்ற எந்தவொரு பழக்கமும் திமுகவினருக்குக் கிடையாது; திமுக எங்களை அப்படி வளர்க்கவும் இல்லை" என்று முழங்கிய எ.வ.வேலு, வரும் ஜூலை 15-ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணையை எதிர்கொள்ளப் போவதாக உறுதியளித்தார். மேலும், இந்த விவகாரத்தில் தன் மீது எந்தத் தப்பும் இல்லை என்றும், முழுமையான நீதி தன் பக்கமே உள்ளது என்றும் அவர் மிகவும் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.