"தாய்மாமனா வந்திருக்கேன்... ஊழல் ஒழிப்பில் முழு முனைப்புடன் இருக்கிறோம்": தாராபுரத்தில் கர்ஜித்த முதல்வர் விஜய்!

 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்துத் தாராபுரம் அருகே உள்ள சித்ராவுத்தன்பாளையத்தில் தமிழக முதலமைச்சர் விஜய் தேர்தல் பரப்புரையாற்றினார்.

தாராபுரம் தொகுதி மக்களுக்குத் தனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்த விஜய், தான் முதலமைச்சராக வரவில்லை என்றும், மாறாக மக்களின் வீட்டுப் பிள்ளையாகவும் தாய்மாமனாகவும் வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஊழல் ஒழிப்பில் முழு முனைப்போடு செயல்பட்டு வருவதாகவும், லஞ்சமற்ற நிர்வாகத்தை வெற்றிகரமாக வழங்கி வருவதாகவும் அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார். தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், கோயில் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டினார்.

பெண்களின் பாதுகாப்பை முழுமையாக உறுதி செய்வதற்காகத் தனிச் சிறப்புப் படை அமைக்கப்பட்டு, புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

நெல் மற்றும் பால் கொள்முதல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், தற்பொழுது 'தாய்மாமன் திட்டம்' மூலமாகத் தாலியை மீட்கும் தாலிக்குத் தங்கம் அல்லது மோதிரம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தங்களின் அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், மேலும் ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் புதிய வெற்றிப் பயணத் திட்டம் தொடங்கப்படவுள்ளதாகவும் அவர் தனது உரையில் பட்டியலிட்டுக் கூறினார்.