“மனைவி, மகளை இழந்து தனிமரமா இருக்கேன்...” மேடையிலேயே கண் கலங்கிய அமைச்சர் சி.வி.கணேசன்!
கடலூர் மாவட்டம் திட்டக்குடி (தனி) தொகுதியில் மீண்டும் போட்டியிடும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், இன்று தனது பிரசாரத்தின் போது குடும்ப இழப்புகள் குறித்து உருக்கமாகப் பேசினார்.
தேர்தல் பிரசாரத்தின் போது தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், “கொரோனா பேரிடர் காலத்தில் மக்கள் பணியில் தீவிரமாக இருந்தபோது, எதிர்பாராத விதமாக எனது மனைவியையும், மூத்த மகளையும் இழந்தேன். அது என் வாழ்க்கையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.”
“வெளியில் நான் சிரித்துப் பேசிக்கொண்டு மக்கள் பணியில் இருந்தாலும், வீட்டுக்குச் சென்றால் நான் ஒரு தனிமரம் தான். தனியாகத் தவித்துக் கொண்டிருக்கிறேன். அந்தச் சோகத்தை நான் வெளியில் காட்டிக் கொள்வதில்லை” என அவர் கலங்கிய குரலில் பேசினார்.
தனது குடும்பத்தை இழந்தாலும், திட்டக்குடி தொகுதி மக்களையும் தனது குடும்ப உறுப்பினர்களாகவே கருதுவதாக அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தொகுதிக்குச் செய்துள்ள நலத்திட்டங்கள் மற்றும் எதிர்கால வாக்குறுதிகளை முன்வைத்து வாக்கு சேகரித்த அவர், மக்களுக்காக உழைப்பதிலேயே தனது மீதமுள்ள காலத்தைச் செலவிட விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு பிரசாரக் கூட்டத்தில் இருந்த பெண்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில், அமைச்சரின் இந்தப் தனிப்பட்ட சோகம் குறித்த பகிர்வு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.