“ரெண்டு வருஷமா குழந்தை இல்லை...” இளம்பெண் தற்கொலை!
நாகர்கோவிலைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமணாமாகி இரண்டு வருடங்களாகக் குழந்தை இல்லாததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகக் கேரளாவில் உள்ள தனது கணவர் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த 27 வயதான விக்னேஸ்வரி என்ற பெண்ணிற்கும், கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதியைச் சேர்ந்த அபிலாஷ் என்பவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு விக்னேஸ்வரி விழிஞ்சத்தில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்தார்.
திருமணாமாகி இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் தங்களுக்குக் குழந்தை இல்லாததால், விக்னேஸ்வரி கடந்த சில மாதங்களாகவே கடுமையான மன வருத்தத்திலும், விரக்தியிலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி விக்னேஸ்வரி அறையின் உள்பக்கமாகக் கதவைப் பூட்டிக்கொண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
வீட்டிற்குத் திரும்பி வந்த விக்னேஸ்வரியின் மாமனார் சந்திரன், அறைக்கதவு நீண்ட நேரமாக உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். சத்தம் போட்டும் கதவு திறக்கப்படாததால், அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது விக்னேஸ்வரி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ந்து போனார்.
அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு விக்னேஸ்வரியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து விழிஞ்சம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.