"உல்லாசத்திற்கு மறுத்ததால் கொன்றேன்!" - கான்ட்ராக்டர் பரபரப்பு வாக்குமூலம்!
தர்மபுரி அருகே கள்ளக்காதலை கைவிட்ட ஆத்திரத்தில், தனது சொந்தக் கொழுந்தியாளை குழிக்குள் தள்ளி கல்லைப் போட்டு கொன்று, மண் மூடிய கட்டிட கான்ட்ராக்டரின் செயல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான கான்ட்ராக்டர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலம் ரத்தத்தை உறைய வைப்பதாக உள்ளது.
தர்மபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த ஒசஅள்ளிபுதூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு (40). இவர் பெங்களூருவில் தங்கி கட்டிட கான்ட்ராக்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ராஜேஸ்வரி (30). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ராஜேஸ்வரியின் அக்கா முனியம்மாளை, பிரபுவின் பங்காளி முறையான அனுமந்தன் (40) என்பவர் திருமணம் செய்துள்ளார். இவரும் ஒரு பில்டிங் கான்ட்ராக்டர் என்பதோடு, சொந்தமாக டிராக்டர் வைத்து வாடகைக்கும் ஓட்டி வருகிறார்.
பிரபு வேலையின் காரணமாக பெங்களூருவிலேயே தங்கியிருந்ததால், மாதத்திற்கு ஓரிரு முறையே ஊருக்கு வந்து சென்றுள்ளார். இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட அனுமந்தனுக்கும், ராஜேஸ்வரிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இவர்களின் இந்த முறையற்ற தொடர்பு அக்கம் பக்கத்தினருக்கு தெரியவரவே, ஊருக்குள் பேச்சு எழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி, தனது தவறை உணர்ந்து அனுமந்தனுடனான தொடர்பை முழுமையாகத் துண்டித்துக்கொண்டார்.
தகாத உறவை கைவிட்ட ராஜேஸ்வரி, அனுமந்தனுடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். ஆனால், காமவெறி தலைக்கேறிய அனுமந்தன், ராஜேஸ்வரியை மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். பலமுறை அழைத்தும் ராஜேஸ்வரி திட்டவட்டமாக மறுத்து வந்ததால் ஆத்திரமடைந்த அனுமந்தன், "எனக்கு கிடைக்காத நீ, வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது" என அவரைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
நேற்று மதியம் ராஜேஸ்வரி தனது மகனின் பள்ளிக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த அனுமந்தன், "கடைசியாக ஒருமுறை மட்டும் பேச வேண்டும்" என நைசாக ஆசை வார்த்தை கூறி தளவாய்அள்ளி பகுதியில் உள்ள கல்லுகொல்லைமேடு என்ற இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மீண்டும் உல்லாசத்திற்கு அழைத்தபோது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அனுமந்தன், ராஜேஸ்வரியை அருகில் இருந்த குழிக்குள் தள்ளிவிட்டு, அங்கிருந்த பெரிய கல்லைத் தூக்கி அவர் தலை மீது போட்டுள்ளார். இதில் ராஜேஸ்வரி மயங்கி விழவே, அவர் இறந்துவிட்டதாகக் கருதி, தனது டிராக்டரில் வைத்திருந்த கட்டிடக் கழிவு மண்ணை அவர் மீது கொட்டி மூடிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அனுமந்தனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.