இந்திய போர்க்கப்பலில் 'ஐ லவ் பாகிஸ்தான்' வாசகம் - தேசத் துரோக வழக்குப்பதிவு செய்து மத்திய அமைப்புகள் விசாரணை!

 

இந்தியப் பாதுகாப்புத் துறையின் மிக முக்கியக் கட்டுப்பாட்டில் உள்ள கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் பழுதுபார்ப்பதற்காகக் கொண்டு வரப்பட்டிருந்த போர்க்கப்பல் ஒன்றின் உள்பகுதியில் 'ஐ லவ் பாகிஸ்தான்' என எழுதப்பட்டிருந்த அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில், எர்ணாகுளம் போலீசார் தற்போது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள பொதுத்துறைக்குச் சொந்தமான கப்பல் கட்டும் தளத்தில், இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல்படைக்கான அதிநவீனப் போர்க்கப்பல்கள் கட்டப்பட்டு வருகின்றன.  பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காகக் கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு அண்மையில் கொண்டு வரப்பட்டிருந்த ஒரு போர்க்கப்பலின் உள்பகுதியில், அடையாளம் தெரியாத நபர்களால் கூர்மையான பொருளைக் கொண்டு 'ஐ லவ் பாகிஸ்தான்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது தற்செயலாகக் கண்டறியப்பட்டது.

மிக உயரிய பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் கப்பல் கட்டும் தளத்தில் இத்தகைய தேச விரோத வாசகம் எழுதப்பட்டிருந்தது பாதுகாப்புப் பிரிவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, மத்திய உளவுத்துறை மற்றும் தேசிய புலனாய்வு முகமை உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் உடனடியாகக் களமிறங்கி முதற்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டன.

இச்சம்பவம் குறித்துக் கொச்சி கப்பல் கட்டும் தளத்தின் உயர் அதிகாரிகள் எர்ணாகுளம் தெற்கு காவல் நிலையத்தில் அவசரப் புகார் ஒன்றை அளித்தனர். புகாரின் அடிப்படையில், எர்ணாகுளம் தெற்கு போலீசார் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள் கப்பல் கட்டும் தளத்தில் தற்காலிகமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வரும் நூற்றுக்கணக்கான ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்தக் குறிப்பிட்ட கப்பல் பழுது பார்ப்பதற்காகக் கொச்சி தளத்திற்குள் நுழைவதற்கு முன்பே, கடலில் பணியில் இருந்த போதே வேறு யாரேனும் ஊழியர்களால் இந்த வாசகம் எழுதப்பட்டதா அல்லது கொச்சிக்கு வந்த பின்னர் இங்குள்ளவர்களால் எழுதப்பட்டதா என்ற கோணத்திலும் தீவிரமாகப் புலனாய்வு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்டதாக இச்சம்பவம் தொடர்பாகப் போலீசார் தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்டு வந்த உள்நாட்டு விமானம் தாங்கிப் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்தின் கணினிப் பாகங்கள் திருடப்பட்ட சம்பவத்தில் சில ஒப்பந்தத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது எழுந்துள்ள இந்த விவகாரம் இந்தியக் கடற்படை வட்டாரங்களில் பெரும் பாதுகாப்புப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.