“இந்த ஆட்சி தொடர்ந்திட, வலுப்பெற உங்க ஆதரவு எப்போதும் தேவை” - பிரச்சார நிறைவு நாளில் விஜய் உருக்கமான அறிக்கை!

 

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்ததை அடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியான மற்றும் அனல் பறக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தனக்கு அளித்த பேரன்பையும், முதல் சேவகனாக தன்னை அமர்த்தியதற்கும் நன்றி தெரிவித்துள்ள விஜய், "தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி!" என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2 தேதிகளில் மதுராந்தகம் தொகுதியிலும், செப்டம்பர் 30 மற்றும் இன்று தாராபுரம் தொகுதியிலும் தான் மேற்கொண்ட வாகனப் பிரச்சாரத்தின்போது செங்கல்பட்டு, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்கள் அளித்த வரவேற்பு எதற்கும் நிகரில்லாதது எனத் தெரிவித்துள்ளார்.

இடைத்தேர்தலில் நம்மை ஏமாற்றி வந்த தீய சக்திகளையும், தீர்ந்துபோன சக்திகளையும் மக்கள் புறந்தள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ள அவர், மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரியுள்ளார்.

மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சத்தியபாமா ஆகியோருக்கு அவர்களின் வெற்றிச் சின்னமான 'விசில்' சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான தவெக, மக்கள் நலன்களைக் காப்பதில் எக்காலத்திலும் சமரசம் செய்து கொள்ளாது என்றும், லஞ்சம் மற்றும் ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் தொடரும் எனவும் விஜய் தனது அறிக்கையில் உறுதியளித்துள்ளார்.