“சினிமாவை விட்டுட்டேன்.. பணக்கார புருஷன்.. 4 குழந்தைங்க இருக்கு” - வைரலாகும் த்ரிஷாவின் இன்ஸ்டா!
நடிகை திரிஷா விரைவில் திருமணமான ஒருவரை மணந்து கொண்டு திரையுலகை விட்டு விலகப்போவதாகச் சமூக வலைத்தளங்களில் கடந்த சில நாட்களாகத் தகவல்கள் சிறகடித்து வந்தன. இந்த வதந்திகளுக்குத் தற்போது திரிஷாவே நேரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், தனது யூடியூப் சேனலில் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில், "திரிஷா சினிமாவை விட்டு விலகப்போவதாக வெளியாகியுள்ள செய்தி உண்மை தான்; சில தயாரிப்பாளர்கள் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளனர்" என்று கூறியிருந்தார். இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவி, ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வதந்திகளைப் பார்த்த திரிஷா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மிகவும் நக்கலாகவும், அதே சமயம் உறுதியாகவும் ஒரு பதிவைப் போட்டுள்ளார்.
“என் கதை முடிந்துவிட்டதா? நான் சினிமாவை விட்டுவிட்டேன், ஒரு பணக்காரரைத் திருமணம் செய்து கொண்டேன், நான்கு குழந்தைகளுக்கு அம்மாவாகி விட்டேன். அவர்களுக்கு நேற்று தான் இரண்டு வயதானது. இன்னும் ஏதாவது கதையில் சேர்க்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ள அவர், தற்போது பரவி வரும் தகவல்கள் அனைத்தும் வெறும் கற்பனையே என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
திரிஷாவின் இந்தப் பதிவு, அவர் தொடர்ந்து சினிமாவில் நீடிப்பார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. தற்போது அவர் கையில் 'விடாமுயற்சி', 'தக் லைஃப்' உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் படங்கள் உள்ளன. வதந்திகளை வெறும் செய்தியாகப் பார்க்காமல், அதை நகைச்சுவையுடன் கையாண்ட விதம் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.