ஜெயிலுக்குப் போகத்தான் திருடினேன்" - ரூ.20 லட்சம் தங்க நகைகளுடன் தப்பியோடிய பெண் .. விரட்டிப்பிடித்த பொதுமக்கள்!

 

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நகைக்கடையில், குடும்பப் பிரச்சினைகளால் நிம்மதியிழந்து சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற விபரீத நோக்கத்துடன் ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்க மோதிரங்களைத் திருடிக்கொண்டு ஓடிய பெண்ணைக் கடைக்காரர்களும் பொதுமக்களும் வீதியில் சினிமா ஸ்டைலில் துரத்திப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நிவாரு சாலையில் 'பவானி ஜூவல்லர்ஸ்' என்ற புகழ்பெற்ற நகைக்கடை இயங்கி வருகிறது. வழக்கம்போல் கடையில் வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தபோது, நடுத்தர வயதுடைய பெண் ஒருவர் நகைகளை வாங்குவதுபோல் சாதாரண வாடிக்கையாளரைப் போல உள்ளே நுழைந்துள்ளார்.

அங்குப் பணியில் இருந்த ஊழியர்களிடம் தனக்குத் தங்க மோதிரங்களைக் காட்டுமாறு அவர் கேட்டுள்ளார். அந்தப் பெண்ணின் பேச்சில் எந்தவித சந்தேகமும் கொள்ளாத ஊழியர்களும், விலை உயர்ந்த தங்க மோதிரங்கள் அடங்கிய பெட்டியை எடுத்து அவர் முன்னால் மேசையில் வைத்துள்ளனர்.

ஊழியர்களின் கவனம் சற்று சிதறிய அந்த விநாடியைப் பயன்படுத்திக் கொண்ட அந்தப் பெண், கண்ணிமைக்கும் நேரத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்புள்ள 25 தங்க மோதிரங்கள் அடங்கிய பெட்டியை அள்ளிக்கொண்டு கடையை விட்டு வெளியேறி மின்னல் வேகத்தில் ஓட்டம் பிடித்தார்.

இதைச்சற்றும் எதிர்பாராத கடை உரிமையாளர் திலோக் சந்த் பிரஜாபத் மற்றும் கடை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே அவர்கள் "திருடி... திருடி..." எனக் கத்திக்கொண்டே அந்தப் பெண்ணை வீதியில் துரத்தத் தொடங்கினர். கடைக் காரர்களின் கூச்சலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினரும் பொதுமக்களும் உடனடியாக ஓடிவந்து அந்தப் பெண்ணைப் பிடிக்கத் துரத்தத் தொடங்கினர்.

பொதுமக்களும் கடைக்காரர்களும் சேர்ந்து சுமார் 500 மீட்டர் தூரம் மூச்சிரைக்கத் துரத்திச் சென்று, அந்தப் பெண்ணை சினிமாத்தனமாக வளைத்துப் பிடித்தனர். அவரிடமிருந்த விலைமதிப்பற்ற நகைப்பெட்டியும் பத்திரமாக மீட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அந்தப் பெண் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அப்போது அவரிடம் நடத்திய சோதனையில், அவரிடமிருந்து மிளகாய் பொடி மற்றும் ஸ்பிரே பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்தப் பெண்ணிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர் அளித்த வாக்குமூலம் காவல்துறையினரை மட்டுமல்லாமல் அனைவரையும் வாயடைக்கச் செய்தது.

விசாரணை குறித்துப் பேசிய அப்பெண், "எனக்குக் குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இதனால் நான் நிம்மதியின்றித் தவித்து வந்தேன். எப்படியாவது சிறைக்குச் சென்றுவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என நினைத்தேன். ஜெயிலுக்குப் போவதற்காகவே நான் இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டேன்" என்று எவ்விதப் பதற்றமும் இன்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.

தற்போது இந்தத் திருட்டுச் சம்பவம் மற்றும் பொதுமக்கள் துரத்திப் பிடிக்கும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி பதிவுகள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி இப்பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.