"விஜய்யை நம்பி வந்தேன்.. தாலியை அறுத்துட்டாங்க" - புதுச்சேரி தவெக-வில் வெடித்த போர்க்கொடி! 

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி, புதுச்சேரியிலும் 30 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப்போவதாகத் தமிழக வெற்றிக் கழகம் அறிவித்துள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் மாநிலப் பொறுப்பாளர் சாமிநாதன் ஆகியோர் மீது அதிருப்தி வேட்பாளர்கள் கடும் ஊழல் புகார்களைச் சுமத்திப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

புதுச்சேரி மணவெளி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்திருந்தவர் முருகன் (என்கிற பெருமாள்). இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, அண்மையில் பாஜகவில் இருந்து வந்த ராமு என்பவருக்குச் சீட் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன், தனது ஆதரவாளர்களுடன் தவெக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய முருகன் உருக்கமாகவும் ஆவேசமாகவும் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 "கட்சியில் காசு பணம் வாங்க மாட்டோம் என்று கூறினார்கள். ஆனால், தற்போது புஸ்ஸி ஆனந்தும், சாமிநாதனும் கோடிக்கணக்கில் பணம் தருபவர்களுக்கே சீட் கொடுக்கிறார்கள். 'அவர் கோடிக்கணக்கில் பணம் தருவார், உன்னால் முடியுமா?' என்று என்னிடம் வெளிப்படையாகவே கேட்டார்கள்."

 "தளபதி விஜய்யை நம்பி வந்த எங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டார்கள். இவர்கள் இருவரும் மாறினால்தான் கட்சி வளரும், இல்லையென்றால் விஜய்யின் அரசியல் எதிர்காலத்தையே இவர்கள் ஒழித்து விடுவார்கள். தவெக-வில் உறுப்பினராகக் கூட இல்லாத, மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்குப் பணத்தைப் பெற்றுக்கொண்டு வாய்ப்பு வழங்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.

போராட்டத்தின் இறுதியாக, புஸ்ஸி ஆனந்த் மற்றும் சாமிநாதனுக்கு எதிராக "ஒழிக" என முழக்கமிட்ட தொண்டர்கள், தாங்கள் அணிந்திருந்த தவெக துண்டுகள், பேட்ஜ்கள் மற்றும் விஜய் படங்களை அலுவலக வாயிலிலேயே வீசி எறிந்துவிட்டுச் சென்றனர். தான் மணவெளி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாகவும் முருகன் அறிவித்துள்ளார்.