“பொறுப்பான அப்பாவாக இருப்பேன்...” மாதம்பட்டி ரங்கராஜ் உருக்கம்.. ஜாய் கிரிசில்டாவின் மகனை ஏற்றுக்கொண்டதாக அறிவிப்பு!
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடனான குழந்தை உரிமைக் கோரல் சர்ச்சையில், டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பிரபலச் சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் மகனுக்குத் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான் என்பது டிஎன்ஏ பரிசோதனை மூலம் அதிகாரப்பூர்வமாக நிரூபணமானது. இதனைத் தொடர்ந்து மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "குழந்தை ராகாவிற்குத் தந்தையாகச் செய்ய வேண்டிய கடமைகளைக் கடந்த 6 மாதங்களாகவே நான் செய்து வருகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தையின் எதிர்காலம் குறித்துப் பேசிய அவர், "இனி வரும் காலங்களிலும் வாழ்நாள் முழுவதும் மகனின் எதிர்காலத்திற்கும் வளர்ச்சிக்கும் முழுப் பொறுப்புடன் ஒரு தந்தையாகத் துணை நிற்பேன்" எனத் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாகச் சமூக வலைத்தளங்களிலும் நீதிமன்ற வட்டாரத்திலும் விவாதப் பொருளாக இருந்த இச் சர்ச்சை, தற்போது முடிவுக்கு வந்துள்ளது.