“நீதி கிடைக்கும் வரை எந்த எல்லைக்கும் சென்று போராடுவேன்!” - கார் விபத்தில் தந்தையை இழந்த மகளின் சபதம்!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் சேரானல்லூரில், 17 வயதுச் சிறுவன் ஓட்டிச் சென்ற சொகுசு பென்ஸ் கார் மோதியதில் சாலையோரக் கடை நடத்தி வந்த ஜெயபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கேரளாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே குற்றம்சாட்டப்பட்ட சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை எதிர்த்து, உயிரிழந்தவரின் மகள் பத்ரகீர்த்தி சட்டப் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
எர்ணாகுளம் அருகே உள்ள சேரானல்லூரில் சாலையோரக் கடை நடத்தி வந்தவர் ஜெயபாலகிருஷ்ணன். இவரை 17 வயதுச் சிறுவன் ஒருவர் அதிவேகமாக ஓட்டி வந்த சொகுசு பென்ஸ் கார் மோதியதில், ஜெயபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விபத்தில், விபத்தை ஏற்படுத்திய 17 வயதுச் சிறுவனுக்குச் சிறார் நீதி வாரியம் விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே ஜாமீன் வழங்கியது. இந்த நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கடும் எதிர்ப்பையும் சர்ச்சையையும் கிளப்பியது.
இது குறித்துக் கண்ணீர்மல்கப் பேசிய ஜெயபாலகிருஷ்ணனின் மகள் பத்ரகீர்த்தி, "என் தந்தையின் இறுதிச் சடங்குகள் வியாழக்கிழமை முடிவடைய இருந்த நிலையில், அதற்குச் சற்று முன்பாகவே இந்தத் தீர்ப்பு வெளியானது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எங்களது நெஞ்சில் கத்தியால் குத்தியது போல் உள்ளது. எங்கள் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தோம்; ஆனால் அது நடக்கவில்லை" எனத் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக வியாழக்கிழமை இரண்டு முக்கிய நீதிமன்றங்களில் விசாரணைகள் நடைபெற்றன.
குற்றம்சாட்டப்பட்ட சிறுவனின் தந்தையான செஷன்ஸ் நீதிபதியின் முன்ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் விசாரித்த அதே வேளையில், 17 வயதுச் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி அரசுத் தரப்பு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை எர்ணாகுளம் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது. பிற்பகலில் இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 17 வயதுச் சிறுவன் தொடர்ந்து ஜாமீனில் இருக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.
கீழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய உத்தரவில் பல்வேறு சட்டக் குறைபாடுகள் இருப்பதாகவும், குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் வெளியில் இருந்தால் சாட்சிகளைத் தங்களுக்குச் சாதகமாக மாற்ற முயற்சிக்க வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டு, ஜாமீனை ரத்து செய்யக் கோரி பத்ரகீர்த்தி தற்போது கேரள உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உரிய நீதி கிடைக்க உச்ச நீதிமன்றம் வரை செல்லத் தங்களது குடும்பம் முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தந்தையை இழந்த ஆறாத துயரம் ஒருபுறம் வாட்டினாலும், தனது தந்தையின் மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்ற உறுதியுடன் பத்ரகீர்த்தி போராடி வருகிறார். "என் அப்பாவுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்திலிருந்து ஒரு அடிகூட பின்வாங்கப் போவதில்லை; அதற்காக எத்தகைய எல்லைக்கும் சென்று போராடுவேன்" என்ற பத்ரகீர்த்தியின் உருக்கமான சபதம் கேரள மக்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியையும் ஆதரவையும் பெற்றுள்ளது.