“தனி கட்சி தொடங்க மாட்டேன்... அரசியலை விட்டே விலகுகிறேன்” - ஓ.பிஎஸ் உருக்கமான பேச்சு!
தேனியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் தற்போதைய நிலை மற்றும் தனது எதிர்கால அரசியல் குறித்துப் பல்வேறு அதிரடித் தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
"அதிமுகவின் உரிமையை மீட்டெடுக்கவே நான் ஒரு இயக்கத்தைத் தோற்றுவித்தேன். அதில் நான் இன்னும் உறுப்பினர்களைக் கூடச் சேர்க்கவில்லை. எந்த நிலையிலும் நான் தனிக்கட்சி தொடங்கமாட்டேன் என்பதைத் தெளிவுபடுத்துகிறேன்" என்று கூறினார். இதன் மூலம் அதிமுகவின் 'இரட்டை இலை' மற்றும் கட்சியின் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்திற்காகவே அவர் தொடர்ந்து போராடி வருவது உறுதியாகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மீது தனக்குள்ள பற்றைக் குறிப்பிட்ட அவர் "கட்சிக்குச் சோதனை வந்தபோதெல்லாம் அம்மா அவர்கள் முதல்வர் பதவியை என்னிடம் ஒப்படைத்தார். அவருக்கு ஒரு மகனைப் போல உண்மையாக இருந்து அந்தப் பணியை நிறைவு செய்தேன். அவர் மறைந்த பிறகு கட்சியினரின் கட்டாயத்தால் மீண்டும் முதல்வர் பதவியை ஏற்றேன். ஜெயலலிதாவுக்கு எந்தத் துரோகமும் செய்யாமல் பணியாற்றிய நிம்மதி எனக்கு இருக்கிறது."
தனது உழைப்பை எவராலும் குறை சொல்ல முடியாது எனக் குறிப்பிட்ட ஓ.பி.எஸ், "இந்த பன்னீர்செல்வம் என்ன தவறு செய்தேன் என்று யாராவது நிரூபித்தால், நான் இப்போதே அரசியலை விட்டே விலகத் தயார்" என மிகக் கடுமையான சவாலை விடுத்துள்ளார். டிடிவி தினகரன் குறித்துப் பேசுகையில், "அவரைப் போல என்னாலும் பேச முடியும், ஆனால் நாகரிகம் கருதி நான் மௌனமாக இருக்கிறேன்" எனத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும், "திமுக கூட்டணி பலமாக இருப்பதால் அவர்களே வெற்றி பெறுவார்கள் என்று அமித்ஷா என்னிடம் கூறினார்" என்ற தகவலையும் ஓ.பி.எஸ் பகிர்ந்து கொண்டது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி தரப்புடன் ஏற்பட்டுள்ள சட்டப் போராட்டங்களில் பின்னடைவுகளைச் சந்தித்து வரும் நிலையில், ஓ.பி.எஸ் அவர்களின் இந்த 'அரசியல் விலகல்' குறித்த பேச்சு, அவரது ஆதரவாளர்களிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.