ஐஏஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை... கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் கைது!

 

பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிப் பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கள்ளக்குறிச்சி தொகுதி தமிழக வெற்றிக் கழக  சட்டப்பேரவை உறுப்பினர் அருள் விக்னேஷ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் தலைமையிலான தனிப்படை போலீசார் அவரைக் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வரும் பெண் ஐஏஎஸ் அதிகாரி பத்மஜாவுக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுத்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை, இவ்வழக்கின் விசாரணை அதிகாரியான காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் தலைமையிலான காவல்துறையினர் இன்று அதிரடியாகக் கைது செய்தனர்.

இவ்விகாரம் தொடர்பாக வாய்மொழியாகப் புகார் அளிக்கப்பட்டு 117 நாட்களுக்குப் பிறகும், மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் எழுத்துப்பூர்வமான புகார் அளிக்கப்பட்டு 4 நாட்களுக்குப் பிறகும் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. தனக்கு ஆபாசக் குறுஞ்செய்திகள் அனுப்பித் தொல்லை கொடுப்பதாகவும், இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் பத்மஜா, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷனாஸிடம் புகார் அளித்திருந்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பெண் ஐஏஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.