அடுத்த 5 ஆண்டுகளில் 10% ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் - ஐபிஎம் தலைவர் எச்சரிக்கை!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி காரணமாக, அடுத்த 5 ஆண்டுகளில் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட சேவைத் துறைகளில் சுமார் 10 சதவீத ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் உருவாகும் என உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தின் தலைவர் அரவிந்த் கிருஷ்ணா எச்சரித்துள்ளார்.
தொழில்நுட்ப உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் குறித்துப் பேசிய ஐபிஎம் தலைவர் அரவிந்த் கிருஷ்ணா, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் நிறுவனங்களின் செயல்பாட்டு முறையை வேகமாக மாற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.
இதன் விளைவாக, அடுத்த 5 ஆண்டுகளில் அலுவலகம் சார்ந்த நிர்வாக மற்றும் தகவல் தொழில்நுட்பப் பணிகளில் சுமார் பாதியளவு வேலைகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமே நேரடியாக மேற்கொள்ளும் நிலை உருவாகும் என அவர் கணித்துள்ளார். இதனால் ஐ.டி. மற்றும் சேவைத் துறைகளில் பணிபுரியும் சுமார் 10 சதவீத ஊழியர்கள் தங்களது வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில், அனைத்துத் துறைகளிலும் மனித உழைப்பை ஏஐ தொழில்நுட்பத்தால் முழுமையாகப் பதிலீடு செய்ய முடியாது என்பதையும் அரவிந்த் கிருஷ்ணா தெளிவுபடுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறிய முக்கியத் தகவல்கள்: உலகளவில் உள்ள மொத்த வேலைவாய்ப்புகளில் சுமார் 60 சதவீதப் பணிகளை செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் மேற்கொள்ள முடியாது.
குறிப்பாகச் சமையல் கலை, கனரக வாகனங்களை இயக்குதல், கட்டுமானப் பணிகள் மற்றும் நேரடி உடல் உழைப்பு, நுணுக்கமான மனிதத் திறன் தேவைப்படும் துறைகளில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் இருக்காது என்றும், அத்துறைகளில் மனிதர்களின் பங்களிப்பு எப்போதும் அவசியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்பத் தங்களது திறன்களை மேம்படுத்திக் கொள்வது மட்டுமே ஐ.டி. ஊழியர்களைப் பாதுகாக்கும் எனத் தொழில்நுட்ப வல்லுநர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.