ஐரோப்பிய யூனியனில் இணைவது தொடர்பான பேச்சுவார்த்தை கைவிடப்படும் - ஐஸ்லாந்து பிரதமர் அறிவிப்பு!
ஐரோப்பிய யூனியனில் மீண்டும் இணைவது குறித்து ஐஸ்லாந்தில் நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் பெரும்பான்மை மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் முழுமையாகக் கைவிடப்படுவதாக நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார்.
ஐரோப்பிய யூனியனில் மீண்டும் இணைவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவது குறித்து ஐஸ்லாந்து முழுவதும் தேசிய ஆலோசனை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் சுமார் 80 சதவீத வாக்காளர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.
தலைநகர் ரேக்யாவீக் பகுதியில் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு ஆதரவு கிடைத்த போதிலும், கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் இதற்குத் தீவிர எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஒட்டுமொத்த வாக்கெடுப்பு முடிவுகளில் ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கு எதிராக 52.5 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். இதனைக் கருத்தில் கொண்டு, ஐரோப்பிய யூனியனில் இணைவது தொடர்பான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் கைவிடப்படும் என்று ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரூன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.