'இது நம்ம இயக்கம்' அண்ணாமலை கட்சியில் லட்சக்கணக்கில் குவியும் தொண்டர்கள்!
நீண்ட நாட்களாக நிலவி வந்த அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலையின் ராஜினாமாவை அக்கட்சியின் தேசியத் தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சமூக வலைதள நேரலையில் தோன்றிய அண்ணாமலை, 'இது நம்ம இயக்கம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி, உறுப்பினர் சேர்க்கையையும் அதிரடியாக ஆரம்பித்துள்ளார். தனது விலகலுக்கான காரணங்கள் மற்றும் கடந்த சில மாதங்களாக டெல்லி தலைமையுடன் இருந்த உறவு குறித்து அண்ணாமலை உருக்கமாகவும் விளக்கியுள்ளார்.
"பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீது நான் மிகுந்த பெருமையும் மரியாதையும் வைத்துள்ளேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், தமிழக அரசியல் கள நிலவரங்கள் தொடர்பாக டெல்லி தலைமையுடன் எனக்குச் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தன. ஓராண்டாகவே இதனை நான் கூறி வருகிறேன். பிரதமர் மோடிக்கு நான் எவ்விதத்திலும் ஒரு பாரமாகவோ அல்லது தொந்தரவாகவோ இருக்கக் கூடாது என கருதினேன்."
"கடந்த டிசம்பர் மாதமே நான் கட்சியை விட்டு வெளியேறும் முடிவை எடுத்துத் தலைமையிடம் தெரிவித்து விட்டேன். ஆனால், தேர்தல் பணிகள் முடியும் வரை தொடருமாறு கட்சி அறிவுறுத்தியதால் தான் இவ்வளவு நாள் பொறுமையாகத் தொடர்ந்தேன். தற்போது தேர்தல் முடிவடைந்ததை அடுத்து, தமிழர் பண்பாட்டின்படி டெல்லி வந்து கட்சித் தலைமையை நேரில் சந்தித்து எனது ராஜினாமாவை அளித்துள்ளேன்."
"முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது இயக்கத்தில் சேருமாறு எனக்குத் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்த போதும், அதனை மறுத்து விட்டுத்தான் தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் பாஜகவில் இணைந்தேன். தமிழகத்தில் நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் பாஜக தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாக இருந்தது" என்றும் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். பாஜகவிலிருந்து முற்றிலுமாக வெளியேறிய அண்ணாமலை, தமிழக அரசியலில் புதிய பாதையை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
"புதிய பாதை, புதிய இயக்கம், புதிய பரிமாணத்தோடு நாம் களமிறங்குகிறோம். தமிழகத்தில் அடுத்து வரவிருக்கும் பொதுத்தேர்தலில் நமது புதிய கட்சி அனைத்துத் தொகுதிகளிலும் மிகத் தீவிரமாகப் போட்டியிடும்; இதில் எவ்வித மாற்றமும் இல்லை" என்று அறிவித்த அண்ணாமலை, 'இது நம்ம இயக்கம்' என்ற பெயரில் தனது புதிய கட்சியைப் பிரகடனப்படுத்தியுள்ளார். கட்சி தொடங்கப்பட்ட மிகக் குறுகிய காலத்திலேயே தமிழக இளைஞர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இந்த இயக்கம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
அண்ணாமலை தனது புதிய இயக்கத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான இணையதள லிங்க்கை வெளியிட்ட முதல் ஒரு மணி நேரத்திலேயே, சுமார் 2,10,000 பேர் தங்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்து கட்சியில் இணைந்துள்ளனர். தமிழக இளைஞர்கள் மத்தியில் அண்ணாமலைக்கு இருக்கும் அசைக்க முடியாத செல்வாக்கை இந்த அசுர வேகம் நிரூபித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.