undefined

“கணவரிடமிருந்து அழுத்தம் வந்தால் நடிகையின் பெயரையும் வெளியிடுவேன்!” - சங்கீதா எச்சரிக்கை!

 

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோருக்கு இடையிலான விவாகரத்து வழக்கு, தற்போது ஒரு முக்கிய நடிகையின் பெயர் குறித்த சர்ச்சையால் புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. 27 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் அவர் கூறியுள்ள புகார்கள் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளன.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் மற்றும் சங்கீதா பிரிந்து வாழ்வதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது சங்கீதா நீதிமன்றத்தில் விவாகரத்து  தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 2021ல் இருந்து ஒரு நடிகையுடனான முறைதவறிய உறவு காரணமாக பிரிந்து வாழ்வதாக தெரிவித்துள்ளார். 

நடிகையுடனான திருமணத்தை மீறிய உறவு குறித்துத் தான் கேள்வி எழுப்பியதால், தன்னைச் சுதந்திரமாக நடமாட விடாமல் விஜய் தடுத்ததாகவும், பொருளாதார ரீதியாகப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்ததாகவும் சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார்.

பொதுவெளியில் விஜய்யின் நன்மதிப்பு கெடக்கூடாது என்பதற்காகவே இதுவரை அந்த நடிகையின் பெயரைத் தான் குறிப்பிடவில்லை என்று சங்கீதா தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது கணவரிடம் இருந்து ஏதேனும் அழுத்தம் வந்தால், அந்த நடிகையின் பெயரைப் பகிரங்கமாக வெளியிடத் தயங்க மாட்டேன் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தேவைப்பட்டால் அந்த நடிகையை இந்த வழக்கின் இரண்டாவது எதிர்மனுதாரராகச் சேர்ப்பேன் என்றும், அந்த நடிகை பகிர்ந்த புகைப்படங்களால் தானும் தனது குழந்தைகளும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் சங்கீதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். நீண்ட நாட்களாக நிலவி வந்த வதந்திகளுக்குப் பிறகு, தற்போது சங்கீதா சட்டப்பூர்வமாக விவாகரத்து கோரியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. வரும் நாட்களில் நீதிமன்ற விசாரணையின் போது அந்த நடிகையின் பெயர் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு சினிமா வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.