"நான் மட்டும் உண்மையைச் சொன்னால் ராதா ஜெயிலுக்குப் போவார்" - நடிகை அம்பிகா கண்ணீருடன் பேட்டி!
தமிழ் சினிமா உலகில் எண்பதுகளில் முன்னணி நடிகைகளாகக் கொடிகட்டிப் பறந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே சொத்துத் தகராறு விவகாரம் முற்றியுள்ள நிலையில், நடிகை அம்பிகா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் தனக்குச் சொந்தமான 'ஏஆர்எஸ் கார்டன்' வீட்டில் இருந்த காசோலையைத் திருடி, நடிகை அம்பிகா மற்றும் அவரது தம்பி மல்லிகார்ஜூன் குஞ்சன் நாயர் ஆகியோர் இணைந்து ரூ.46 கோடி மோசடி செய்ய முயன்றதாகக் கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை ராதா அண்மையில் புகார் அளித்திருந்தார். மேலும், தன்னைப் போனில் தொடர்பு கொள்ளவில்லை என்றும் வீட்டின் உள்ளே அனுமதிக்கவில்லை என்றும் அவர் கண்ணீருடன் பேட்டியளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்துச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அம்பிகா, ராதாவின் புகார்கள் அனைத்தும் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை எனத் தெரிவித்தார். ஏஆர்எஸ் கார்டன் ஸ்டூடியோ உருவாக்கத்தில் தனது உழைப்பு உள்ளதாகவும், எம்.ஜி.ஆர். வழங்கியதாகக் கூறப்படும் தகவல் தவறு என்றும் அவர் விளக்கம் அளித்தார். சொத்து மற்றும் தங்க நகைகள் விவகாரத்தில் ராதா முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
சொத்து விவகாரத்தைத் தீர்ப்பதற்காகச் செக் கொடுத்ததே ராதா தான் என்றும், ஆனால் தற்போது தன் மீது பொய்யான மோசடிப் புகாரைக் சுமத்தியுள்ளதாகவும் அம்பிகா தெரிவித்தார். "நான் மட்டும் உண்மையைச் சொன்னால் ராதா தான் சிறைக்குச் செல்ல நேரிடும்" எனக் குறிப்பிட்ட அவர், தமக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாயை ராதா தர வேண்டும் என்றும் வேதனை தெரிவித்தார்.
குடும்பப் பிரச்சனை வெளியே வரக்கூடாது எனத் தான் நினைத்ததாகவும், ஆனால் ராதா அவ்வாறு செயல்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தன் மீது திருட்டுப் புகார் கூறப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாததால் தான், 'பணம் காசைக் கண்டுபுட்டா...' பாடலைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டதாகக் குறிப்பிட்ட அம்பிகா, குடும்பத்தினர் விரும்பினால் சமரசத்திற்குத் தயார் என்றும் கண்கலங்கியபடி கூறினார்.