ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி இருக்காது.. ராஜேந்திர பாலாஜி

 

"திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அன்றோடு தவெக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும்" என்று அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்துள்ளார். அதிமுகவைத் தூர்ந்து போன சக்தி என்று விமர்சித்த தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அவர் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் பேச்சு குறித்துக் காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.

"முதலமைச்சர் பொறுப்பில் அமர்ந்திருக்கும் விஜய், பொதுவெளியில் பேசும்போது தார்மீகப் பொறுப்புணர்வோடு பேச வேண்டும். அதைவிடுத்து, தமிழகத்தின் மாபெரும் பேரியக்கமான அதிமுகவைப் பார்த்து 'தூர்ந்து போன சக்தி' எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று சாடினார்.

"அரசியல் களத்தில் மத யானைக்கு நிகராகப் பார்க்கப்படும் திமுகவையே பலமுறை நேருக்கு நேர் எதிர்கொண்டு, அவர்களை அடக்கி ஆண்ட பாரம்பரியம் மிக்கவர்கள் நாங்கள். எங்களை அற்பமாக எடை போட வேண்டாம்" என்று குறிப்பிட்டார். தற்போதைய அரசியல் நகர்வுகளைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எப்போது கோபம் வருகிறதோ, அப்போது தவெக ஆட்சி முடிவுக்கு வரும் எனத் தெரிவித்தார்.

தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் எதிர்க்கட்சிகள் குறித்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு அதிமுக தரப்பிலிருந்து வந்துள்ள இந்த நேரடிப் பதில்  அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.