"மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டி வராவிட்டால் மொட்டை அடியுங்கள்" - அமைச்சர் ஜெகதீஸ்வரி சர்ச்சைப் பேச்சு!
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசுப் பள்ளி விழாவில் பேசிய சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, பள்ளி மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டி வராவிட்டால் அவர்களுக்கு மொட்டை அடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டம், அயன்ரெட்டியாபட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 'ஆதிரை அறக்கட்டளை' சார்பில் புதிய சுற்றுச்சுவர் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அறி ஆகியோர் கலந்துகொண்டு திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.
விழாவில் பேசிய அமைச்சர் ஜெகதீஸ்வரி, "தகப்பன் சொல்வதை விடத் தாயார் சொல்வதை தான் குழந்தைகள் அதிகமாக கேட்கிறார்கள். இன்றைக்கு இருக்கிற பசங்க முடி வெட்டுவதைப் பார்க்கும்போது அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது. பிள்ளைகளைப் பார்க்கும் போது ரௌடியைப் பார்ப்பது போல இருக்கிறது. பெற்றோர்கள் ஏன் இதை அனுமதிக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "பள்ளி மாணவர்கள் ஒழுங்காக முடி வெட்டி வராவிட்டால் மொட்டை அடியுங்கள். மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது முறையாக முடி திருத்தம் செய்து வர வேண்டும்" என்று பேசினார்.
மாணவர்களின் சீர்திருத்தம் என்ற பெயரில் "மொட்டை அடியுங்கள்" என அமைச்சர் பொதுமேடையில் பேசியுள்ளது குழந்தைகள் உரிமையாளர்கள் மற்றும் நெட்டிசன்கள் இடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.