"தென் மாநிலங்கள் பாதிக்கப்பட்டால் கண்டிப்பாய் எதிர்ப்போம்" – டெல்லியில் திருச்சி சிவா பேட்டி!

 

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக சார்பில் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மற்றும் மேகதாது விவகாரம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் திமுகவின் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைத்தார். மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுவரையறை மசோதா குறித்துப் பேசிய திருச்சி சிவா, இதில் தென் மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை திமுக ஒருபோதும் சகித்துக்கொள்ளாது என்று எச்சரித்தார்:

"தொகுதி மறுவரையறை குறித்து மத்திய அரசு மிகவும் தெளிவான வழிமுறைகளை வெளியிட வேண்டும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்கள் இதன் மூலம் பாதிக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறையும் வகையில் இந்த மசோதா அமைந்தால், அதனை திமுக கண்டிப்பாக எதிர்க்கும். வரைவு மசோதாவை முழுமையாகப் பார்த்த பின்னரே எங்களின் இறுதி நிலைப்பாட்டை அறிவிப்போம்."

பெண்களுக்கான நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இட ஒதுக்கீடு குறித்துப் பேசிய அவர், தொகுதி மறுவரையறை என்ற காரணத்தைக் காட்டி மகளிர் இட ஒதுக்கீட்டைத் தள்ளிப்போடக் கூடாது என்றார். தற்போது நடைமுறையில் உள்ள தொகுதி எண்ணிக்கையின் அடிப்படையிலேயே பெண்களுக்கு உடனடியாக இட ஒதுக்கீடு அளிப்பதை திமுக முழுமையாக ஆதரிக்கிறது என்றும், இந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனே கொண்டு வர திமுக வலியுறுத்தும் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து மத்திய அரசின் இதர மசோதாக்கள் மற்றும் உட்கட்சி விவகாரங்கள் குறித்து அவர், மத்திய அரசு கொண்டு வரவுள்ள உயர் கல்வி திருத்த மசோதா நாடாளுமன்றத்திற்கு வரும்போது, மாநில உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் அதனை திமுக நிச்சயமாக எதிர்க்கும். நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் அமரும் இருக்கைகளை மாற்றி அமைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தோம். எங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, இருக்கைகளை மாற்றித் தர சபாநாயகர் ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சனையான காவிரி நீர் மற்றும் மேகதாது அணை விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது. கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயலும் விவகாரம் மற்றும் தமிழகத்திற்கு உரியத் தண்ணீரைத் திறந்து விடக் கோரும் விவகாரத்தை, நாளை  நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் (மக்களவை மற்றும் மாநிலங்களவை) திமுக எம்பிக்கள் வலுவாக எழுப்பிப் போராடுவார்கள் என்று திருச்சி சிவா திட்டவட்டமாகத் தெரிவித்தார்.