"விசிக நினைச்சிருந்தா தேர்தலுக்கு முன்பே திமுக கூட்டணி சிதறியிருக்கும்" - திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உடைந்து சிதைய வேண்டும் என்ற காழ்ப்புணர்ச்சியோடு சில அரசியல் சக்திகள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும் வேறு முடிவெடுத்திருந்தால், தேர்தலுக்கு முன்பாகவே திமுக கூட்டணி முற்றிலுமாகச் சிதறிப்போயிருக்கும்" என்று குறிப்பிட்டார்.
நடந்து முடிந்த தேர்தலில் திமுக கூட்டணி பல தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு விசிகவின் வாக்கு வங்கியே மிக முக்கியமான காரணம் என்றும், அதற்கான துல்லியமான புள்ளிவிவரங்களும் தரவுகளும் தங்களிடம் உள்ளதாகவும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
கட்சியைக் குலைக்க நடக்கும் சதி முயற்சிகள் குறித்துத் தொடர்ந்து பேசிய அவர், விசிக வளர்ந்து வருவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி அதை உடைத்துச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சில அரசியல் சக்திகள் பின்னணியில் இயங்கி வருகின்றன.
இத்தகைய காழ்ப்புணர்ச்சி எண்ணம் கொண்டவர்களின் சதித்திட்டங்களை உணர்ந்து, தொண்டர்களும் நிர்வாகிகளும் விழிப்புணர்வுடன் கட்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். திமுக கூட்டணி வெற்றிக்கு விசிகதான் காரணம் எனத் திருமாவளவன் பேசியுள்ளது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன.