நாங்கள் ஆதரவு தராவிட்டால் இந்த ஆட்சி பொறுப்பேற்றிருக்காது.. CPI
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே காரசாரமான விவாதங்கள் நடந்து வரும் நிலையில், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தங்களது ஆதரவு நிலைப்பாடு குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். தவெக அரசுக்கு தாங்கள் அளித்த ஆதரவு நிபந்தனையற்றது அல்ல என்பதையும் அவர் தனது பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன், "சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்ற நோக்கில், தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருவது என நாங்கள் சுயமாக முடிவெடுத்தோம். தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழலில், நாங்கள் மட்டும் தவெக அரசுக்கு ஆதரவு தராமல் போயிருந்தால், கடந்த மே 10ஆம் தேதி புதிய அரசு பதவியேற்றிருக்கவே முடியாது.
தமிழகத்தில் சட்டமன்றம் முடக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் சூழல் ஏற்பட்டிருக்கும். மக்கள் வாக்களித்த பிறகு, மாநிலத்தில் அப்படி ஒரு அசாதாரணமான அரசியல் சூழல் உருவாவதைத் தடுக்கவே நாங்கள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்தோம்" என்று அரசியல் பின்னணியை விளக்கினார்.
தொடர்ந்து தங்களது கூட்டணி நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், "நாங்கள் தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு தருகிறோமே தவிர, எந்தக் கூட்டணியிலும் இல்லை. இது முழுக்க முழுக்க மக்கள் நலனை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட முடிவு. இந்த மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, தொடர்ந்து நல்லாட்சியை வழங்கினால் மட்டுமே எங்களது ஆதரவும் நீடிக்கும்.
அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் எவை இருந்தாலும், அதைச் சட்டமன்றத்திற்குள்ளும் வெளியிலும் தட்டிக்கேட்கும் சுதந்திரம் எங்களுக்கு எப்போதும் உண்டு" என்று மிகத் திட்டவட்டமாகக் கூறினார். சட்டமன்ற விவாதங்களின் சூடான சூழலில், சிபிஐ மாநில செயலாளரின் இந்த அதிரடி அறிக்கை தவெக அரசுக்கான அரசியல் பிடியை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.