“எங்க மண்ணை மிதிச்சாலே உசுரோட திரும்ப மாட்டாங்க” - அமெரிக்காவின் தரைவழித் தாக்குதலுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த ஒரு மாதமாக ஈரானின் உள்கட்டமைப்புகள், ஏவுகணைத் தளங்கள் மற்றும் எரிசக்தி மையங்களை வான்வழியாகத் தாக்கி வருகின்றன. தற்போது இந்தப் போர் அடுத்தகட்டமான 'தரைவழித் தாக்குதல்' நிலைக்கு நகர்ந்துள்ளது.
அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, ஈரானின் முக்கியப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 3,500 கூடுதல் வீரர்கள் வளைகுடா பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது ஈரானை ஒட்டிய எல்லைப் பகுதிகளை அடைந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீரர்களில் சுமார் 1,000 பேர் வான்வழியாகப் பாராசூட் மூலம் குதித்து, எதிரி நாட்டுப் பகுதிகளை மின்னல் வேகத்தில் கைப்பற்றும் '82-வது ஏர்போர்ன்' பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் ஹோர்முஸ் நீரிணைப் பகுதிகளைக் கைப்பற்றுவதே அமெரிக்காவின் முதன்மை இலக்காகக் கருதப்படுகிறது. அமெரிக்காவின் இந்தத் திட்டத்திற்கு ஈரான் மிகக் கடுமையான முறையில் பதிலளித்துள்ளது:
அமெரிக்கத் தரைப்படை ஈரான் மண்ணில் கால் பதித்தால், அந்த வீரர்கள் அனைவரும் "தீயிட்டு எரிக்கப்படுவார்கள்" என்றும், அவர்கள் உயிருடன் திரும்ப முடியாது என்றும் ஈரானின் நாடாளுமன்ற அவைத் தலைவர் முகம்மது பாஹர் காலிபாக் எச்சரித்துள்ளார்.
"அமெரிக்கத் தளபதிகளும் வீரர்களும் பாரசீக வளைகுடாவில் உள்ள சுறாக்களுக்கு இரையாவார்கள்" என ஈரானின் இஸ்லாமியப் புரட்சி காவல் படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய அதிகாரிகளின் வீடுகளே ஈரானின் அடுத்த இலக்காக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை ஈரான் நிராகரித்துள்ளது. இதனால் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மங்கி வருகின்றன. ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
பாதிப்புகள்: கடந்த ஒரு மாத காலப் போரில் இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.