"உயிரோடு இருந்தால் சரணடையுங்கள்.." - ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை!

 

மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிக்கை உலக நாடுகளை உற்று நோக்கச் செய்துள்ளது. ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமேனி உயிருடன் இருக்கிறாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ள டிரம்ப், அவர் இருந்தால் சரணடைவதே புத்திசாலித்தனம் என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் ஈரானின் உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற மொஜ்தபா காமேனி, பொறுப்பேற்ற பிறகு இதுவரை பொதுவெளியில் தோன்றவில்லை. இது குறித்து பேட்டியளித்த டிரம்ப், "மொஜ்தபா காமேனி உயிருடன் இல்லை என்று எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்பதே தெரியவில்லை. ஒருவேளை அவர் உயிருடன் இருந்தால், தனது நாட்டைக் காப்பாற்ற அவர் செய்ய வேண்டிய ஒரே காரியம் சரணடைவது மட்டுமே" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழும் கார்க் தீவு மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலை டிரம்ப் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஈரானின் 90 சதவீத எண்ணெய் ஏற்றுமதி நடைபெறும் இந்தத் தீவில், எண்ணெய் உள்கட்டமைப்புகளைத் தவிர்த்துவிட்டு, 90-க்கும் மேற்பட்ட ராணுவ இலக்குகள் (ஏவுகணை சேமிப்பு கிடங்குகள் மற்றும் கண்ணிவெடி வசதிகள்) துல்லியமாகத் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

ஹோா்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் தொடர்ந்து இடையூறு விளைவித்தால், அடுத்த இலக்கு ஈரானின் எண்ணெய் கிணறுகளாகத்தான் இருக்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

உலகளாவிய எண்ணெய் விநியோகப் பாதையான ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாக்க, சீனா, ஜப்பான், பிரான்ஸ், தென் கொரியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்களது போர்க்கப்பல்களை அந்தப் பகுதிக்கு அனுப்ப வேண்டும் என்று டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

ஈரான் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த டிரம்ப், ஆனால் அந்த ஒப்பந்தம் மிகவும் "உறுதியானதாக" இருக்க வேண்டும் என்றார். குறிப்பாக, ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை முழுமையாகக் கைவிடுவது மட்டுமே அமைதிக்கு வழிவகுக்கும் என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.