7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கலைன்னா... நடிகர் பிரகாஷ் ராஜு மீது ரூ.100 கோடி மானநஷ்ட வழக்கு - திருப்பதி தேவஸ்தான உறுப்பினர் அதிரடி!
கேரள இலக்கிய விழாவில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசிய கருத்து தற்போது அவருக்குப் பெரிய சட்டச் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசிய பிரகாஷ் ராஜ், "ராமரும் லட்சுமணனும் வடஇந்தியாவிலிருந்து வந்து தென்னிந்தியாவில், குறிப்பாக இலங்கையில் போர் தொடுத்தார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பேச்சு ராமாயண இதிகாசத்தைத் திரித்துக் கூறுவதாகவும், ஆரிய - திராவிடப் பிரிவினையைத் தூண்டுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி சார்பில் அவரது வழக்கறிஞர் இந்த நோட்டீஸை அனுப்பியுள்ளார். அதில், பிரகாஷ் ராஜின் பேச்சு கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையைப் புண்படுத்தியுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் 299, 196 மற்றும் 356 ஆகியவற்றின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அடுத்த 7 நாட்களுக்குள் செய்தித்தாள்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஒருவேளை பிரகாஷ் ராஜ் 7 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்கத் தவறினால், அவர் மீது ரூ. 100 கோடி நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும், உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அந்த நோட்டீஸில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கமாகத் தனது அரசியல் கருத்துகளால் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் பிரகாஷ் ராஜ், இந்த முறை ஒரு மிகப்பெரிய தொகையை நஷ்டஈடாகக் கோரும் வழக்கைச் சந்தித்துள்ளார். தற்போது தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நடிகர் விஜய்யின் 'தவெக' மற்றும் திமுக கூட்டணிக்கு ஆதரவாகப் பேசி வரும் பிரகாஷ் ராஜுக்கு எதிராக இந்தச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.