மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்... “பெண்களை இழிவுபடுத்துவதா?” - பொன்ராஜ் பேச்சுக்கு ஆதவ் அர்ஜுனா கண்டனம்!

 

தமிழகப் பெண்களை அவதூறாகப் பேசியதாகக் கூறப்படும் பொன்ராஜின் கருத்துக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதவ் அர்ஜுனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) பதிவில், பொன்ராஜ் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் ஊடக பேட்டி ஒன்றில் பேசிய பொன்ராஜ், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பெண்களை விமர்சிப்பதாக நினைத்து, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டுப் பெண்களையும் 'விபச்சாரிகள்' என வக்கிரம் நிறைந்த வார்த்தைகளால் இழிவுபடுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகப் பெண்களை மிக மோசமான வார்த்தைகளால் இழிவுபடுத்தியுள்ள பொன்ராஜின் கருத்து வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எந்தவொரு சாமானிய மனிதனும் சொல்லக் கூசும் வார்த்தைகளை அவர் ஊடகங்களில் பேசியுள்ளார்."

"திமுக ஆதரவாளராக மாறிய பிறகு பொன்ராஜ் அடிப்படை அறமற்றவராகச் செயல்படுகிறார். இதுபோன்ற அருவருக்கத்தக்கப் பேச்சுகளைத் திமுக தலைவர் ஸ்டாலின் அமைதியாக இருந்து ரசித்துக் கொண்டிருக்கிறாரா?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பெண்களை இழிவுபடுத்திப் பதற்றமான சூழலை உருவாக்கும் பொன்ராஜ் மீது தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தான் பேசிய கருத்துக்குப் பொன்ராஜ் உடனடியாகத் தமிழகப் பெண்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், பெண்கள் மீது இத்தகைய மோசமான பார்வை கொண்டவர்களுக்குத் தமிழக மகளிர் தங்களது ஜனநாயகப் போராட்டத்தின் மூலம் தக்க பாடம் புகட்டுவார்கள் என ஆதவ் அர்ஜுனா எச்சரித்துள்ளார்.

முன்னதாக, தவெக தலைவர் விஜய்யும் இந்தப் பேச்சுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இந்தப் பெண் குறித்த அவதூறுப் பேச்சு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.