"பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள்.." - அமைச்சர் ஆனந்த் ஓபன் டாக்!

 

செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆனந்த், இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் கொடுத்தால் மக்கள் அதைத் தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் என்று வெளிப்படையாகப் பேசியுள்ளது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கூட்டத்தில் பேசிய அமைச்சர் ஆனந்த், மற்ற கட்சிகள் பணம் கொடுத்தால் அதைத் தயங்காமல் வாங்கிக் கொள்ளுங்கள் என்று பொதுமக்களிடம் பகிரங்கமாகத் தெரிவித்தார்.

மதுராந்தகம் இடைத்தேர்தல் வேட்பாளராக மரகதம் குமரவேல் நின்றாலும், மக்கள் அவரைப் பார்க்க வேண்டாம் என்றும், நேரடியாக முதலமைச்சர் விஜய்தான் வேட்பாளர் என்று நினைத்து வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மக்களின் அனைத்துப் பிரச்சினைகளும் விரைவில் தீர்த்துவைக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

கடந்த 140 நாட்களில் தாங்கள் நடத்திய ஆட்சியில் எங்குமே ஊழல் இல்லை என்று குறிப்பிட்ட அவர், பல லட்சம் கோடிக்கு பட்ஜெட் போட்டாலும் அதில் இருந்து பணம் அடிக்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்காவது தோன்றும், ஆனால் முதலமைச்சர் விஜய்க்கு அந்தச் சிந்தனையே இருக்காது என்று புகழாரம் சூட்டினார்.

அடுத்த 20 ஆண்டுகளுக்குத் தமிழகத்தின் முதலமைச்சராக விஜய்தான் தொடர்வார் என்று குறிப்பிட்ட அவர், தேர்தல் வாக்குறுதிகள் குறித்துத் தங்களை தைரியமாகவும் தில்லாகவும் பொதுமக்கள் கேள்வி கேட்கலாம் என்றார். மேலும், ஒரு வாக்கைப் பதிவு செய்வதற்காக வெளிநாடுகளில் இருந்து கூட 80,000 ரூபாய் வரை செலவு செய்து மக்கள் வருகிறார்கள் என்றால், அதற்கு ஒரே காரணம் நடிகர் விஜய் மட்டும்தான் என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.