"தவறு செய்தால் பதவி பறிக்கப்படும்!" - அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் விஜய் எச்சரிக்கை!

 

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்கள் மற்றும் நிர்வாகத்தினருக்குத் தமிழக முதலமைச்சர் விஜய் கடுமையான நெறிமுறைகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் அனைத்துத் துறை அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கட்சியின் கொள்கைகளையும் அரசின் நேர்மையையும் அழுத்தமாகப் பதிவு செய்தார். "நமது தமிழக வெற்றிக் கழக அரசு, மக்கள் மத்தியில் முற்றிலும் ஊழலற்ற மற்றும் தூய்மையான அரசாகத் திகழ வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். இதில் எந்தவித சமரசமும் கிடையாது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், நிர்வாகத்தில் தவறிழைப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் பாயும் என்பதைத் திட்டவட்டமாக உணர்த்தினார். "அமைச்சர்கள் யாராவது தவறு செய்தால் அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டால், உடனடியாக அவர்களின் அமைச்சர் பதவி பறிக்கப்படும். தவறு செய்பவர்கள் எனக்கு நெருக்கமானவர்களா, தெரிந்தவர்களா அல்லது தெரியாதவர்களா என்றெல்லாம் நான் பார்க்க மாட்டேன். தவறு என்று வந்துவிட்டால் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என  எச்சரித்துள்ளார்.

அரசின் நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வுகளுக்காகப் பள்ளிகளுக்குச் செல்லும் அமைச்சர்களுக்குப் புதிய வழிகாட்டுதல் ஒன்றையும் முதல்வர் வழங்கியுள்ளார். அமைச்சர்கள் அரசுப் பள்ளிகளுக்கு ஆய்விற்கோ அல்லது நிகழ்ச்சிகளுக்கோ செல்லும்போது, அங்கே தேவையின்றி வீடியோ எடுப்பதையோ அல்லது விளம்பரப் படுத்துவதையோ முற்றிலும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தின் முதல் பாதியில் பேருந்து கட்டண உயர்வுக்கு முட்டுக்கட்டை போட்ட முதலமைச்சர் விஜய், அடுத்ததாகத் தனது சொந்த அமைச்சர்களுக்கே இத்தகைய கடுமையான எச்சரிக்கையை விடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.