"தவறு செய்தால் அமைச்சர் பதவி பறிக்கப்படும்" - லஞ்சமற்ற அரசு குறித்து அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை!

 

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. வரவிருக்கும் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் தயாரிப்புகள் மற்றும் புதிய தொழிற்சாலைகளுக்கான அனுமதிகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அமைச்சரவை சகாக்களுக்கு முதலமைச்சர் விஜய் பல்வேறு உத்தரவுகளையும், எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தனது தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு லஞ்சமற்ற, வெளிப்படைத்தன்மை கொண்ட அரசாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார். "ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாகத் தட்டாமல் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்தால் அமைச்சர் பதவி உடனடியாகப் பறிக்கப்படும். இந்த விஷயத்தில் தெரிந்தவர், தெரியாதவர் என்ற எந்தப் பாகுபாட்டையும் நான் பார்க்கப் போவதில்லை. தவறு நடந்தது உறுதியானால் அடுத்த நிமிடம் பதவி பறிக்கப்படும்."

அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்துப் பேசிய முதலமைச்சர், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு ஆய்வு என்ற பெயரில் செல்வதைக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். குறிப்பாக, அமைச்சர்கள் பள்ளிகளுக்குச் சென்று அங்குள்ள தினசரி செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்றும், பள்ளி வளாகங்களில் 'ரீல்ஸ்' போடுவது போன்ற சமூக ஊடகச் செயல்களில் ஈடுபடுவதைத் முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தின் போது, குறிப்பிட்ட சில அமைச்சர்களின் செயல்பாடுகளைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் இந்த எச்சரிக்கைகளை விடுத்ததாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.