"உங்க நாட்டுக்கு திரும்பினால் ரூ.2.16 லட்சம் போனஸ்.. விமான கட்டணமும் நாங்க தர்றோம்!" - இந்தியர்களைக் குறிவைத்து ட்ரம்பின் அடுத்த அதிரடி!
அமெரிக்காவில் ஆவணங்கள் இன்றித் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற, அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) ஒரு அதிரடி திட்டத்தை இன்று அறிவித்துள்ளது. "தாங்களாகவே முன்வந்து நாடு கடந்து செல்லுதல்" (Self-Deportation) என்ற இத்திட்டத்தின் கீழ், வெளியேறுபவர்களுக்குப் பண முடிப்பும், இலவசப் பயணமும் வழங்கப்பட உள்ளது.
'புரொஜெக்ட் ஹோம் கமிங்' (Project Homecoming) என்றால் என்ன?
அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற சில மாதங்களிலேயே குடியேற்றக் கொள்கைகளில் கடும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார். அதன் ஒரு பகுதியாக உருவானதுதான் இந்தத் திட்டம். சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாத புலம்பெயர்ந்தோர், அமெரிக்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுச் சிறை தண்டனையோ அல்லது சட்ட நடவடிக்கைகளையோ எதிர்கொள்வதற்கு முன்பாக, தாங்களாகவே கௌரவமாக வெளியேற ஒரு வாய்ப்பு வழங்குவதே இதன் நோக்கம். இந்தத் திட்டத்தின் கீழ் வெளியேற முன்வருபவர்களுக்கு $2,600 (இந்திய மதிப்பில் சுமார் ₹2.16 லட்சம்) போனஸ் தொகையாக வழங்கப்படும். அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான விமான டிக்கெட் கட்டணத்தை அமெரிக்க அரசாங்கமே முழுமையாக ஏற்கும்.
இந்தத் திட்டத்தை விளம்பரப்படுத்த அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை ஒரு விநோதமான உத்தியைக் கையாண்டுள்ளது. குறிப்பாக ஆவணங்கள் இல்லாத இந்தியப் புலம்பெயர்ந்தோரை ஈர்க்க, தாஜ்மஹாலின் புகைப்படத்தைப் பயன்படுத்திச் சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது. "நீங்கள் ஒரு புதிய தொடக்கத்துடன் வீட்டிற்குச் செல்லலாம்" என்ற வாசகத்துடன் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'CBP Home' செயலி - எப்படிச் செயல்படுகிறது?
புலம்பெயர்ந்தோர் இந்தச் சலுகையைப் பெற Customs and Border Protection (CBP) உருவாக்கியுள்ள 'CBP Home' என்ற பிரத்யேக செயலியைப் பயன்படுத்த வேண்டும். பயனர்கள் தங்கள் விவரங்களைச் செயலியில் பதிவேற்ற வேண்டும். அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை அதிகாரிகள் இதன் மூலம் கண்காணிப்பார்கள். பயனர்கள் தாங்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறிவிட்டோம் என்பதை உறுதிப்படுத்தத் தேவையான ஆதாரங்களைப் பதிவேற்றிய பின்னரே, அந்த நிதியுதவி அவர்களுக்கு முழுமையாகக் கிடைக்கும்.
ஏன் இந்தத் திட்டம்?
கட்டாயமாக நாடு கடத்துவதற்கு ஆகும் அதிகப்படியான செலவு மற்றும் நீண்டகாலச் சட்டப் போராட்டங்களைத் தவிர்க்கவே அமெரிக்கா இந்த 'சுய நாடு கடத்தல்' முறையை ஊக்குவிக்கிறது. இது சட்ட ரீதியான கறைகள் இன்றிப் புலம்பெயர்ந்தோர் வெளியேற ஒரு "பாதுகாப்பான வழி" என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.