"ரஜினி பற்றிப் பேசினா கேட்பேன்” - ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக தவெக மேடையிலேயே நிர்வாகி அசோக் ஆவேசம்!

 

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மேடையில், அக்கட்சியின் நிர்வாகி ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினிகாந்த் குறித்துப் பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதே மேடையில் மற்றொரு நிர்வாகி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் பேசிய கட்சியின் முக்கிய நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, "திமுக குடும்பத்தின் மிரட்டலால் தான் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை; ஆனால் எங்கள் தலைவர் விஜய் அத்தகைய மிரட்டல்களுக்கு அஞ்சாதவர்" என்ற தொனியில் பேசினார். இது ரஜினி ரசிகர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தரப்பினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கட்சியின் மேடையிலேயே சக நிர்வாகியின் கருத்துக்கு எதிராகப் பேசியது, அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ரஜினி குறித்துப் பேசியதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் குறித்துப் பாஜக பிரமுகர் அர்ஜுன மூர்த்தி தவெக தலைவர் விஜய்க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், "ஆதவ் அர்ஜுனா போன்ற அரசியல் முதிர்ச்சி இல்லாத நபர்களின் பேச்சு, கட்சியின் பெயரைக் கெடுக்கும். ரஜினிகாந்தை மிரட்ட யாராலும் முடியாது என்பது உலகம் அறிந்தது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஆதவ் அர்ஜுனாவின் கருத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை நடிகர் ரஜினிகாந்த்,  காலம் பதில் சொல்லும் என்று அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், நேற்று இரவு, தனது கருத்து தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது என்று ஆதவ் அர்ஜுனா தனது பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார்.