தேர்வில் செல்போன் பயன்படுத்திய  IIT  மாணவர் தற்கொலை ... 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டம்

 

 

மும்பை: மும்பையில் உள்ள ஐஐடி பாம்பே (IIT Bombay) கல்வி நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு நடைபெற்று வந்த இடைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐஐடி பாம்பேவின் எனர்ஜி சயின்ஸ் அண்ட் இன்ஜினியரிங் துறையில் 2-ம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை தேர்வு எழுதியுள்ளார். அப்போது தேர்வு அறையில் செல்போன் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஐஐடி பாம்பே வெளியிட்ட அதிகாரப்பூர்வ விளக்கத்தின்படி, தேர்வில் கேட்கப்பட்ட கேள்வித்தாளை ChatGPT-ல் பதிவேற்றி அதற்கான பதில்களைப் பெற முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மாணவர் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை என்று ஐஐடி பாம்பே தெரிவித்துள்ளது. மேலும், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் துறைத் தலைவர் மாணவரிடம் பேசியதாகவும், அவரது கல்வி எதிர்காலத்தை இந்த சம்பவம் பாதிக்காது என்று அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு மாணவர் தனது விடுதி அறைக்குத் திரும்பியுள்ளார். பின்னர் அவர் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராஜவாடி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவர் உயிரிழந்த தகவல் வளாகத்தில் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான மாணவர்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை ஐஐடி பாம்பே இயக்குநர் பேராசிரியர் ஷிரீஷ் கேடார் சந்தித்து பேசியதாகவும், பின்னர் மாணவர்கள் கூட்டம் வளாகத்தில் உள்ள Convocation Hall பகுதிக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, ஐஐடி பாம்பேவில் நடைபெற்று வந்த இடைத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர் உயிரிழந்தது தொடர்பான சூழ்நிலைகள் குறித்து உரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக ஐஐடி பாம்பே தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாணவர்கள் நிர்வாகத்திடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வளாகத்தில் போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பவத்தின் முழுமையான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.